சிவில் பாதுகாப்பு, மனித உரிமைகள் தரப்படுத்தலில் இலங்கை தரமிறக்கம்

எமது அமைப்பின் ‘சிவில் இடைவெளி’ தொடர்பான தரப்படுத்தலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையானது ‘ஒடுக்கப்பட்டுள்ளது’ எனும் நிலைக்குத் தரமிறக்கப்பட்டுள்ளது என சிவிகஸ் எனும் சர்வதேச சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகள் மற்றும் சிவில் சமூக இடைவெளியை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி தென்னாபிரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டிணைவான சிவிகஸ் அமைப்பினால் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

எமது அமைப்பின் ‘சிவில் இடைவெளி’ தொடர்பான தரப்படுத்தலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையானது ‘ஒடுக்கப்பட்டுள்ளது’ எனும் நிலைக்குத் தரமிறக்கப்பட்டது. அதிகாரிகளால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒடுக்கப்படல், ஊடகவியலாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள், சிவில் செயற்பாட்டாளர்கள் இலக்குவைக்கப்படல் மற்றும் பொறுப்புக்கூறலின்மை என்பன இத்தரமிறக்கலுக்குக் காரணமாக அமைந்தன.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகள் பாதுகாவலர்கள், கடந்தகால மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர், அம்மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்திவரும் அவர்களது குடும்பத்தினர் உள்ளடங்கலாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களைத் தொடர்ந்து இலக்குவைத்துவருவதாக கடந்த ஜனவரி மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதேபோன்று இலங்கை அரசாங்கத்தினால் உயர் பாதுகாப்பு அடிப்படையில் கையாளப்படும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர்கள் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக ‘யுக்திய’ எனும் பெயரில் இடம்பெறும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும், அதனை மீளாய்வுக்கு உட்படுத்துமாறும் அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தனர்.

அடுத்ததாக நபரொருவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாக உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட தேசபந்து தென்னகோன் கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதியினால் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

இதுஇவ்வாறிருக்க கடந்த 2022 ஆம் ஆண்டு பரந்துபட்ட அளவிலான போராட்டங்களுக்கு வழிகோலிய பொருளாதார நெருக்கடி தற்போதும் தொடர்கின்றது. அதுமாத்திரமன்றி மிகமோசமான கடன்நெருக்கடியின் விளைவாக சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்படும் சர்ச்சைக்குரிய நிபந்தனைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் 22 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.