சீனாவின் மாநிலமாக மாறும் துறைமுக நகரம் – அனுரகுமார திஸாநாயக்க

துறைமுக நகரத்தை சீனாவின் மாநிலமாக மாற்றும் அதிகாரத்தை வழங்கி, ஆணைக்குழு சட்டமூலம் ஒன்றை ஜனாதிபதி உருவாக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு என்ற பெயரில் சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது.

இந்த துறைமுக நகரம் எந்த உள்ளூராட்சி நிறுவனத்தின் ஆளுகைக்கும் உட்படாது. உள்ளூராட்சி நிறுவனங்கள் அந்த பிரதேசத்திற்கு உட்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படுகிறது.

எனினும் ஜனாதிபதியால், நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களே துறைமுக நகரத்தை ஆட்சி செய்வார்கள். அத்துடன் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதனை செய்தாலும் செய்ய தவறினாலும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கோப் உட்பட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இந்த சீன மாநிலத்தை அழைக்க முடியாது. அதேபோல் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரமே துறைமுக நகரில் முதலீடு செய்ய முடியும். துறைமுக நகரில் தொழில் புரியும் நபர்களுக்கு சீனாவின் யுவான் நாணயம் மூலமே சம்பளம் வழங்கப்படும்.

வருமான வரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள முக்கியமான சட்டங்களை துறைமுக நகரில் அமுல்படுத்த முடியாது. இப்படியான பல பாரதூரமான விடயங்கள் இதன் மூலம் நடக்கும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.