கடன் மறுசீரமைப்புக்கு சீனாவை இணங்கச் செய்ய சர்வதேச நாணய நிதியம் முயற்சி

சர்வதேச நாணய நிதியம் சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதுடன் இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பதில் சீனாவை இணங்கச்செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.

ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, கடன் ஸ்திரத்தன்மை மற்றும் அதுசார்ந்த நெருக்கடிகள் தொடர்பில் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கும், இவ்விடயத்தில் தாம் எத்தகைய பங்களிப்பை வழங்கமுடியும் என்பது குறித்துச் சிந்திப்பதற்கும் சீனாவிற்கு உதவத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

‘அந்தவகையில் நாம் சீன அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதுடன் இரு முக்கிய விடயங்கள் தொடர்பில் செயற்பட்டுவருகின்றோம். முதலாவதாக தீர்வொன்றை நோக்கிய கலந்துரையாடலுக்கு ஏற்றவாறு சீனாவின் அனைத்துக் கடன் முகவரங்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கின்றோம். மிகநீண்ட செயன்முறையான இது தற்போதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது’ என்று கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சாட், சாம்பியா, இலங்கை மற்றும் சுரினாம் ஆகிய நாடுகளுக்கான கடன் தீர்வை நோக்கிய பாதையை வகுப்பது குறித்து சீனாவுடன் கலந்துரையாடிவருகின்றோம் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

‘இவ்விவகாரத்தில் பெருமளவிற்கு சீனாவின் முயற்சியையும் அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக நாங்கள் சீனாவில் இருந்தபோது சீன நிதியமைச்சு மற்றும் சீன மக்கள் வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு அனுமதிகோரினோம். அதேபோன்று சீனாவின் பாரிய கடன்வழங்குனர்களான சீன எக்ஸிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் சந்திக்க விரும்பினோம். அதற்கமைவாக அவர்கள் இச்சந்திப்பிற்கு வருகைதந்ததுடன் இவ்விவகாரம் தொடர்பில் மிகவும் ஆரோக்கியமாகவும் நேரிடையாகவும் கலந்துரையாடினோம்’ என்று கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஆசியப்பிராந்தியத்தின் தற்போதைய நிலைவரங்களால் இந்தியா பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ‘இலங்கை மற்றும் பாகிஸ்தான் என்பன இந்தியாவின் அயல்நாடுகளாக இருக்கின்றன. இந்நாடுகள் நிலையற்றதும், தளம்பலானதுமான நிலையில் உள்ளன.

எனவே இப்போது நான் இந்தியாவில் இருந்திருந்தால், உலகில் என்ன நடக்கின்றது என்பது குறித்தும் அந்நிகழ்வுகள் என்னை எவ்வாறு பாதிக்கப்போகின்றது என்பது குறித்தும் பெரிதும் கவலைப்பட்டிருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.