ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியினை ஆரம்பித்து ஏழு வருடங்களின் பின்னர் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் நிருவாகக் கட்டமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், கட்சியின் கொள்கைப் பிரகடணம் கட்சியின் தலைவரால் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன் வருகை தந்த அரசியற் பிரமுகர்களின் வாழ்த்து மற்றும் கருத்துரைகளும் இடம்பெற்றிருந்தன.
இதன் போது கட்சியின் தலைவராக சி.வேந்தன், உபதலைவராக ந.நகுலேஸ், செயலாளராக இ.கதிர், உபசெயலாளராக த.கவியரசன், பொருளாளராக த.விதுரன், தேசிய அமைப்பாளராக க.துளசி, மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளராக ந.நகுலேஸ், வவுனியா மாவட்ட இணைப்பாளராக நெல்சன், திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக நவமேனன், யாழ் மாவட்ட இணைப்பாளராக கவியரசன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராக கருணாகரன், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக ஆதவன், மன்னார் மாவட்ட இணைப்பாளராக ஜீவா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தலைமையில் இடம்பெற்ற இத் தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர், தேசிய அமைப்பாளர் க.துளசி, உபதலைவர் ந.நகுலேஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் (ரெலோ) சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளருமான நிரோஷ் உள்ளிட்ட அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடக்கு கிழக்கு மாகாண உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.