தமிழக முதல்வரால் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் சென்னை துறைமுகத்திலிருந்து இன்று (18) நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு வழங்கும் உதவியின் ஒரு கட்டமாக, நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு கடந்த மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்திருந்தார்.

அதன்படி, 40,000 தொன் அரிசி, 500 தொன் பால் மா, இந்திய ரூபாவில் 28 கோடி ரூபா பெறுமதியான 137 வகையான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கப்பல் மூலம் நாட்டிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப்பொருட்களை தமிழகத்தின் சிறுபான்மையின மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் நேற்று சென்று பார்வையிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிவாரணப்பொருட்களை ஏற்றிய கப்பலை இன்று மாலை முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.