வலி கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி

யாழ். வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தலைமையில் (மே 18) காலை 7 மணிக்கு ஒன்று கூடிய பிரதேச சபை உறுப்பினர்கள் பணியாளர்கள் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி அனுஷ்டிப்பைத் தொடர்ந்து தவிசாளர், மற்றும் சபையின் உறுப்பினர்கள் செல்வதிசைநாயகம் தவநாயகம் ஆகியோர் அஞ்சலியுரையாற்றினர். இவ் அஞ்சலியுரைகளில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமைகளுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் சிறப்புரையாற்றினார்.

அதில் அவர் தெரிவித்ததாவது,

“எமது மக்கள் மீது தொடர்ச்சியாக அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்டே வந்துள்ளது. சிங்கள மக்கள் போன்று நாட்டில் உரிமைகளுடன் நாமும் ஓர் தேசிய இனம் என்ற வகையில் வாழ வேண்டும் என்றே எமது இனம் அபிலாசை கொண்டுள்ளது.

அரசியல் உரிமைகளை கேட்டு அகிம்சை வழியில் போராடிய போது எமக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்ட அரச பயங்கரவாதமே ஆயுதப்போருக்கு வழிவகுத்தது.

அரச படைகள் ஊடாக எமது சிறுவர்கள் வயோதிபர்கள் பெண்கள் என்ற பாகுபாடின்றி மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டுள்ளோம்.

உலகம் மனித உரிமைகளுக்காக பாடுபடுகின்ற ஓர் சூழ்நிலையில் அத்தனை உரிமைகளும் அரசினாலேயே இலாவகமாக மீறப்பட்டுள்ளன.

அரச படைகளால் எமது மக்கள் கடலிலும், தரையிலும் வெட்டியும், சுட்டும், வான் வெளி கொத்துக் குண்டு வீச்சிலும் எத்தனையே ஆயிரம் சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்களின் உரிமைகள் பற்றி உலகம் பேசுகின்றது.

ஆனால் எத்தனை பெண்கள் யுத்தகாலத்தில் அரச அணுசரனையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுனர். அதுபோன்று தமிழ் மக்களை கொன்றழித்த கொலைக்குற்றவாளிகள் தண்டனைகள் வழங்கப்படாது அவர்களுக்கு அரச அந்தஸ்தளிக்கப்பட்டுள்ளது.

அரச படைகளிடம் சரணடைந்த மற்றும் அரச படைகளால் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களைத் தேடி தாய்மார் இன்றும் போராடுகின்றனர்.

எதற்குமே நீதி கிட்டவில்லை. போரில் குழந்தைகளைக் கூட கொன்று குவித்த அரசிற்கு எதிராக போதுமான மனித உரிமை ரீதியிலான ஒழுங்குகள் பிரயோகிக்கப்படவில்லை என்பதை ஓர் இனமாக நாம் வெளிப்படுத்துகின்றோம்.

இந்நிலையில் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு வழங்க இணக்கம் காணப்படுகின்ற உதவிகள் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் பற்றிய பொறுப்புச் சொல்வதை உறுதிப்படுத்துவதுடன் தமிழ் மக்கள் மீது மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் உறுதிப்படுத்துவதாகவும் எமக்கான தீர்வை முன்வைப்பதாகவும் அமையவேண்டும்”. என மேலும் தெரிவித்துள்ளார்.