இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் 1987 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வழக்குத் தொடர்ந்ததன் அடிப்படையில் 2006 ஒக்ரோபர் 10ஆம் திகதி வடகிழக்கு இணைப்பு செல்லாது மற்றும் சட்டவிரோதமானது என்ற அறிவித்தல் வந்தது. இது ஜே.வி.பி யின் தமிழர்கள் விடயம் தொடர்பான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டும்.
ஆனால், இன்றைய காலங்களில் தமிழர்களது விடயங்களில் அக்கறையானவர்களாக தம்மைக் காண்பிக்க முயற்சிக்கிறார்கள். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்த ஜே.வி.பியின் தாபகத் தலைவர் ரோஹ விஜயவீர தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தீவிரமாக எதிர்த்தார். அவர் இலங்கையின் ஆட்சியை ஆயுத முனையில் பிடிக்க இரண்டு முறை முயற்சித்தார்.
1971இல் அவரது இயக்கம் மேற்கொண்ட ஆயுதப் புரட்சி தோல்வியானது. மீண்டும் இலங்கை அரசுக்கு எதிராக 1987-1989 காலப் பகுதியிலும் முயற்சி பயனற்றுப் போனது உலப்பன தேயிலைத் தோட்டத்தில் ஒளிந்திருந்த விஜயவீராவை, இராணுவம் 1989 ஒக்ரோபர் 3ஆம் திகதி கைது செய்தது. நவம்பருடன் அவர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவர்கள் அரசியல் இயக்கமாகச் செயற்பட்டு வருகிறார்கள்.
குறிப்பிட்டளவான ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் பெறும் கட்சியாக அது வளர்ந்தது. ஆனால், கடந்த சில தேர்தல்களிலும் தேசிய அரசியலிலும் சரி, தமிழர்களது விடயங்களிலும் சரி கணக்கிலெடுக்கப்படாத நிலையை எட்டியிருந்த ஜே.வி.பி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவை விரட்டியடித்த அரகலயவுடன் சற்று மேம்படுத்திக் கொண்டதுடன், இப்போது இந்தியா அழைத்துப் பேசும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இது ஒரு முன்னேற்றம்தான்.
அதே நேரத்தில் மக்களிடமும் ஆதரவைப் பெருக்கிக் கொண்டது என்ற ஒரு மாயையும் தன்வசப்படத்திக் கொண்டுள்ளது என்பது உண்மை. அரசியலிலும் பன்னாட்டு உறவுகளிலும் நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ இல்லை என்பது பல்வேறு நிகழ்வுகளின் மூலம் நிரூபிக்கப்படலாம். அதற்கு ஜே.வி.பியும் விலக்களிப்புக்கு உட்பட்டதல்ல.
ஜே.வி.பி யின் இந்திய விஜயம் அந்நாட்டின் இராட்சிய நலன்கள் சம்பந்தப்பட்டது மாத்திரமல்ல இலங்கைத் தமிழர்களது விவகாரத்திலும் முக்கியமானது. ஆனாலும், இந்தியா மேற்கொண்ட ஜே.வி.பி தொடர்பான இராஜதந்திர நகர்வு அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சிக்குள் தள்ளியதுடன், உலகில் நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ கிடையாது என்ற கோட்பாட்டை இந்தியா கடைப்பிடிப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
இலங்கை விவகாரத்தில் இந்தியா எந்த அளவுக்கு அக்கறையுடனும் கவனத்துடனும் இருக்கிறது என்பதற்கு நல்லதோர் உதாரணமாக இருக்கும் ஜே.வி.பி யினருக்கான அழைப்பு நல்லதொரு சமிக்ஞையாக இருந்தாலும், வேறு ஒரு நாடி பிடிப்பாகவும் இருக்கலாம்.
அதே நேரத்தில் இலங்கை அரசியலில் முழுமையான ஈடுபாட்டுடன்தான் இருக்கிறோம் என்பதனை வெளிப்படையான அறிவிப்பாகவும் இதனைக் கொள்ளலாம். ஜே.வி.பி. எனும் மக்கள் விடுதலை முன்னணி ரோஹண விஜயவீரவால் 1960களில் ஆரம்பிக்கப்பட்டவேளை, அவருடைய கடும்போக்கு அரசியலுடன் இந்தியா தொடர்பிலும் விரோதப் போக்கையே கடைப்பிடித்துவந்திருந்தார்.
அதற்கு அவர் கொடுத்த விளக்கமாக இலங்கை நாட்டின் சுயாதிபத்தியத்துக்கு எதிராகச் செயற்படுபவர்கள் தொடர்பிலான நிலைப்பாடு அமைந்திருந்தது. அவர்கள் தொடர்ந்து கொண்டிருந்த கடும்போக்கு இந்திய விஜயத்துடன் சற்றுத் தளர்ந்திருப்பதாகவே பேசப்படுகிறது.
எதிர் நிலைப்பாட்டு அரசியலையே மேற்கொண்டுவருகின்ற ஜே.வி.பியானது கடும்போக்கைக் கடைப்பிடித்திருந்தாலும் ஆட்சி அதிகாரம் என்று வருகின்றவேளை, கடும்போக்கைத் தணித்து இராஜதந்திர ரீதியில், ஓரளவுக்கேனும் மென்போக்கு தேவையானதாக இருக்கிறது என்பதனையே இந்தியாவின் அழைப்பையேற்று சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கின்றமை காட்டிநிற்கிறது.
பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவமுடையதான இலங்கை, இந்தியாவுக்கு அதன் தேசியப் பாதுகாப்பு, ஒருமைப்பாடு என பல்வேறு விடயங்களிலும் தேவையானதொன்று. எனவே இங்கு ஏற்படவிருக்கின்ற அல்லது ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற அரசியல் மாற்றம் பார்வைக்கு உட்படுவதில் தவறொன்றுமில்லை.
அந்தவகையில்தான் ஜே.வி.பியினருக்கான இந்திய அழைப்பும் அமைந்திருக்கிறது. இவ்வருடத்தில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் இந்தியா, மேற்குலக சக்திகளாலும் முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது. இது தவிர்க்கமுடியாதது.
இலங்கையில் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ, வாக்களித்த சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்டமையில் ஜே.வி.பியினரின் பங்கு முக்கியமாக இருந்தது. அதன் பின்னர் உருவாகியிருக்கின்ற அரசியல் மாற்றம் அவர்களது பக்கம் பெரும் மக்கள் அலையொன்றை உருவாக்கியிருக்கிறது.
மூன்று ஆசனங்களையே பாராளுமன்றத்தில் கொண்டிருக்கின்ற அக் கட்சிக்கு இது சாதகமானதே. அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புகளின்படி தற்போதைய ஜனாதிபதிக்கும் ஜே.வியினருக்கும் இருக்கின்ற ஆதரவானது சம அளவுகளிலேயே காணப்படுகின்றமை தெரியவருகிறது.
அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு அளவினை விடவும் ஜே.வி.பிக்கு அதிகம் என்பதே இதிலுள்ள பிரதான விடயமாகும். இந்திய ஊடகம் ஒன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் 50 சதவீதம் ஆதரவு இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இதுவே இந்தியா ஜே.வி.பியை இந்தியா அழைத்தமைக்கு ஓர் உந்துதலாகும்.
இலங்கையில் அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் ஒரு கட்சியை இந்தியா தங்களுடைய அனுசரிப்புக்குள் இழுத்தக் கொள்வதற்காகவே இந்த அணுகல். இது தவிர வேறொன்றில்லை.
இன்னொருபுறம், 70களின் பிற்பகுதியிலிருந்து தமிழருடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை ஜே.வி.பி. வலியுறுத்திவந்திருந்தது. இந்த அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் அதில் இணைந்து செயற்பட்டார்கள்.
பின்னர் 1986இல் ஜே.வி.பியின் தலைவர் ரோஹண விஜேவீர, அதன் மத்திய குழுவுக்காற்றிய மிக நீண்ட உரையில் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் முறியடிக்கப்பட வேண்டிய ஓர் ஏகாதிபத்திய சதி என்றார். அதுவே இன்றுவரை ஜே.வி.பியின் அரசியல் வேதமாகத் திகழ்கிறது. இதில் ஒரு மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.
அதனோர் அங்கமே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்ட வட, கிழக்கினை அவர்கள் பிரித்து வேறாக்கியமையாகும். இந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினை அமுல்படுத்துவதில் முழு எதிர்ப்பாக இருந்து வருகின்ற இக்கட்சியை எவ்வாறு இந்தியா தம்முடைய பார்வைக்குள் அல்லது கட்டுக்குள்கொண்டுவர முயல்கிறதா என்பது கேள்வி.
அப்படியானால், நாங்கள் ஒப்பந்தத்தைச் செய்தோம். அது உங்களது நாட்டின் அரசியலமைப்பில் இருக்கிறது. அதனை நீங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாடு காரணமாக இருக்கலாம். இருந்தாலும், இந்தியா தன்னுடைய நலன்களை அலசாமல் இந்த நகர்வை எடுத்திருக்க வாய்ப்பில்லை.
இந்த நகர்வு ஒருவேளை, ரணிலுக்கு தேர்தலில் வெற்றி கிட்டாவிட்டால், தற்போதிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை விடவும் அதிகப்படியான வாக்குகளைப் பெறப்போகின்ற ஒருவர் அனுரகுமார திசாநாயக்கவாக இருப்பார்.
அவ்வேளையில், ஏற்படக்கூடிய தர்மசங்கடத்தினைத் தவிர்த்துக்கொள்வதற்கு இந்தியா முன்கூட்டியே இந்த நகர்வினை எடுத்திருக்கிறது என்றும் கொள்ளமுடியும். எது எவ்வாறானாலும், தற்போதைய ஜனாதிபதியான ரணில்தான் இந்தச் சந்திப்புக்கான வேலைகளைச் செய்து கொடுத்தார். ஜே.வி.பி. க்கு இந்தியா தம்முடைய ஆதரவினை வழங்குவதற்கு முன்வருகிறது.
தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ஜே.வி.பி. யின் ஒத்துழைப்பு முயற்சிக்கப்படுகிறது. என்றெல்லாம் பேசப்படுகின்ற பல்வேறு விடயங்கள் இதற்குள் இருக்கத்தான் செய்கிறது. ரணில் இதனை ஏற்பாடு செய்கிறார் என்றால், ஜே.வி.பி தொடர்பில் அவர் வெளியிடும் கருத்துக்கள் அரசியலாக இருக்கும்.
இல்லாவிட்டாலும், ரணிலுக்கு ஜே.வி. பியின் ஆதரவு கிடைப்பதற்கு ஏதுநிலைகள் ஏற்படுத்தப்பட முயற்சிக்கப்படலாம். ஆனாலும், இது இந்தியாவின் தனிப்பட்ட முயற்சியாக இருக்க வாய்ப்புமில்லை. எப்படியிருந்தாலும், ஜே.வி.பி. யினை இந்தியா, அவசர அவசரமாக உள்வாங்க முற்படுவதற்கு வேறும் காரணங்கள் இருக்கலாம். இல்லாமலுமிருக்கலாம்.
அரசியலில், இராஜதந்திரம் சகஜம்தானே.! என்றவகையில் தமிழர்களுடய விவகாரத்திலும் தேசிய அரசியலிலும் ஒரு நெகிழ்வுப் போக்கை, அனுசரிப்பு நிலைப்பாட்டை கைக்கொள்ள விளையும் ஜே.வி.பி. எதிர்வரும் காலங்களில் தமிழர்களது அரசியல், இனப்பிரச்சினை தொடர்பில் நல்லெண்ணத்தைக் கைக்கொள்ளும் என்று நம்பிக்கை கொள்வோம்.
– லக்ஸ்மன்