மே ஒன்று உலக தொழிலாளர் தினம். எமது தமிழர் தாயகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை இழந்து ஒடுக்கப்படுகின்ற சமூகமாக தொடர்ந்து தங்கள் வாழ்வில் போராடி வருகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் 29.04.2023 அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிங்கள ஆட்சியாளர்களின் நிலையற்ற பொருளாதார கொள்கையினால் தொழிலாளர்களின் உரிமைகள் பெயரளவில் வரையறை செய்யப்பட்டாலும் பாதிக்கப்படும் போது தொழிலாளர்களுக்கான நியாயங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதுடன், அரசின் அதிகார வர்க்கம் மேற்கொள்ளும் சுரண்டல்களும், ஊழல்களும் தொழிலாளர் வர்க்கத்தை மீண்டெழ விடாது தொடர்ந்து ஒடுக்குமுறையில் வைத்துள்ளது.
தமிழர்களின் மறுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்கான விடுதலை கிடைக்கும் வரை தமிழர் தேசத்தின் தொழிலாளர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படுவார்கள். எனவே தமிழின விடுதலையே தொழிலாளர்களின் விடுதலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.