தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்  திறப்பு தங்களிடமே தரப்பட்டதாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  நினைத்து செயற்படுவது வேதனைக்குரியது – பா.உ. ஜனா

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திறப்பை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்களிடமே தந்துவிட்டதாக  அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் நினைத்துக் கொண்டு இப்படியான தியாகிகள் தினங்களில் தனித்து தியாகிகள் தினங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில் வேதனைக்குரிய விடயம். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தியாகி திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவையொட்டி மட்டக்களப்பு காந்திப் பூங்காவில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று தியாகி திலீபன் அவர்களது 35ஆவது ஆண்டு நினைவு தினம். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது தடவையாக நினைவு கூரப்பட்டதையிட்டு உண்மையிலேயே வேதனையடையக் கூடியதாக இருக்கின்றது. இத்தனை இழப்புக்களுக்குப் பின்பும், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் எங்களுக்குள் ஒரு ஒற்றுமையில்லை என்பதை நினைக்கும் போது உண்மையில் வேதைனையாக இருக்கின்றது. இருந்தாலும் தியாகங்கள் என்பது பல்வகைப்பட்டது. 1974ஆம் அண்டு தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்று பொன் சிவகுமாரன் தன்னுடைய உயிரைத்தியாகம் செய்ததிலிருந்து 2009 மே 18 வரை பல தியாகங்கள் தமிழர்களின் உரிமையைப் பெறுவதற்காக இந்த நாட்டிலே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் திலீபனுடைய தியாகம் முற்றிலுமாக மாறுபட்ட ஒரு தியாகமாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். ஏனென்றால், போராட்டத்தில் மோதலில், குண்டு வெடிப்பில் தன்னுடைய உயிரை எம் மக்களுக்காகத் தியாகம் செய்யாமல் உண்ணா நோன்பிருந்து அஹிம்சை வழியில், காந்திய வழியில் தன்னுடைய உயிரை ஈர்த்த ஒரேயோரு நபர் என்றுதான் நாங்கள் கூறக்கூடியதாக இருக்கும்.

உண்மையில், அவருடைய அதே காலத்தில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தவன் என்ற ரீதியில் அவருடன் ஒரே இயக்கத்தில் இணைந்து பயணிக்காவிட்டாலும் சம காலத்தில் இரு வேறு திசைகளில் பயணித்தவன் நான் என்ற வகையில் இன்று 35 வருடங்களில் முதல் முறையாக அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் புழகாங்கிதமடைகின்றேன். அந்தவகையில், திலீபன் அவர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை மு;னவைத்து உண்ணா நோன்பிருந்து 12 நாட்களில் மரணத்தைத் தழுவியிருந்தார். அந்த ஐந்து கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகள் 35 வருடங்கள் கடந்த போதும்; நிலுவையில், கோரிக்கைகளாகவே இருக்கின்றன. பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக அகற்றப்பட வேண்டும். இராணுவ முகாம்களிலும், சிறைகளிலுமிருக்கும் தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளில் மூன்று இன்றும் தொடர்ச்சியாகவே இருக்கிறது.

அந்த வகையில், தமிழ் ஈழப் போராட்டத்தில் குறிப்பாக, பிரதானமாக 5  இயக்கங்கள் சமகாலத்தில் போரிட்டிருந்தாலும் அந்த இயக்கங்களுக்குள் ஒற்றுமையீனும் ஏற்பட்டது. அந்தக் கால கட்டத்தில்  தங்களுக்குள் பல வகையான முரண்பாடுகளுடன் அந்த போராட்டங்கள் தங்களுக்குள்ளும் நடைபெற்றது. இருந்தாலும் தமிழர்களின் உரிமைக் குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சக்தி இருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உணர்ந்ததன் நிமிர்த்தம் 2001இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. வடக்குக் கிழக்கில் தமழ் மக்களின் பெரும் பிரதிநிதியாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இன்று ஒரு சில கட்சிகள் பிரிந்து சென்றிருந்தாலும் தனித்துவமாக நடந்து கொண்டிருந்தாலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திறப்பை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்களிடமே தந்துவிட்டதாக  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே தந்துவிட்டதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று கூற முடியாது அந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே மணிவண்ணன் தரப்பினரும், கஜேந்திரகுமாரும் உரிமை கோருகிறார்கள். எனவே அகில இலங்கை தமிழ்க் காங்கிரசிடமே பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் திறப்பைத் தந்து விட்டுச் சென்றிருப்பதாக தாங்கள் நினைத்துக் கொண்டு இப்படியான தியாகிகள் தினங்களில் தனித்து தியாகிகள் தினத்தை, இங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தில் கூட செய்து கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில் வேதனைக்குரிய விடயம். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமல்ல.

நாங்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த இடத்தில் திலீபன் அவர்களை நினைவு கூர்ந்தாலும் இன்றைய சூழலில் பெருமளவான மக்கள் அவரை நினைத்து அஞ்சலி செலுத்துவதற்கு மனமிருந்தாலும், இலங்கை அரசியன் புலனாய்வுப்பிரிவினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து, அதாவது விசாரணைகளுக்கு அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளும் முகமாக இப்படியான நிகழ்வுகளை தவிர்த்துக் கொண்டு வருகிறார்கள். அந்த நிலை நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனால், இன்று சற்றுக் குறைந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்று கூறமுடியாது. கடந்த காலங்களில் திலீபன் உட்பட எமக்காக உயிர் நீத்த அத்தனை தியாகிகளையும் நினைத்து அனைவருக்குமாக பிரார்த்திப்போமாக என்றார்.