தமிழ்க் கட்சிகளின் நகர்வு: உடன்பாடு எட்டப்படுமா என்ற கேள்வி இறுதிவரையில் தொடர்ந்த நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையிலான சந்திப்பில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. கொழும்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற 11 கட்சிகளின் தலைவர்களுடைய சந்திப்பில் எட்டப்பட்ட உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என வர்ணிக்கப் பட்டிருக்கின்றது.
எதிர்பார்க்கப்பட்டதைப் போல கடுமையான வாக்குவாதம் தொடர்ந்தது. இருந்த போதிலும், இறுதியில் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட சில திருத்தங்களையும் உள்ளடக்கியதாக புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிஇதில் பெரும்பாலும் எதிர்வரும் 29 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கைச்சாத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 11 கட்சித் தலைவர்களினதும் சம்மதத்துடன், வரைவு தற்போது இறுதியாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. எதிர்வரும் புதன்கிழமை இது கைச்சாத்திடப்பட்ட பின்னர் வார இறுதியில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் மூலமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது அனுப்பி வைக்கப்படும்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைந்து நடத்துவது என்பவற்றை உள்ளடக்கிய கோரிக்கைகளுடனான ஆவணத்தை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு கூட்டாக அனுப்பி வைப்பதை நோக்கமாகக் கொண்டே ரெலோ அமைப்பினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் நவம்பர் முதல்வாரத்தில் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக இரண்டாவது சந்திப்பு இம்மாத முற்பகுதியில் கொழும்பில் இடம்பெற்றது. செவ்வாய்கிழமை மூன்றாவது சந்திப்பு இடம்பெற்றது. ரெலோ அமைப்பின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட ஆவணம் இதில் இறுதியாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தமிழரசுக் கட்சி தனியாக மற்றொரு ஆவணத்தை முன்வைத்ததையடுத்து முரண்பாடுகள் உருவாகியது.
இறுதியில் இரண்டு ஆவணங்களையும் பரிசீலித்து இரண்டில் உள்ளவைகளையும் உள்ளடக்கியதாக புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. ‘ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை 30 வருடங்களின் பின்னர் மீண்டும் கேட்பதா?’ என முன்வைக்கப்பட்ட கேள்விகளையடுத்தே இந்த மாற்றம் செய்யப்படுகின்றது. இவ்வாறான மாற்றம் ஒன்று செய்யப்பட வேண்டும் என்பதை தமிழரசுக் கட்சியே வலியுறுத்தியது.
தமிழ்க் கட்சிகளின் நகர்வு’13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருதல்’ என்பதே ஆவணத்தின் தலைப்பாக முன்னர் இருந்தது. தற்போது அது, ‘தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை – இந்திய ஒப்பந்தமும்’ என மாற்றப்பட்டுள்ளது. புதிய வரைவு தயாரிக்கப்படும் போது அதன் நோக்கம் உள்ளடக்கம் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைவாகவே இருக்கின்றது. இந்த வரைவை கட்சிகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது கைச்சாத்திடப்படும் என இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
செவ்வாய்கிழமை சந்திப்பில் உருவான முரண்பாடுகளையடுத்து புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. சிறிகாந்தா, சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகிய மூவரும் இன்றைய தினம் இரவே வரைவை இறுதியாக்கி, கட்சிகளின தலைவர்களுடைய பரிசீலனைக்காக இதனை அனுப்பிவைத்தார்கள்.
அந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைவு தற்போது கட்சித் தலைவர்களின் இறுதிக்கட்ட பரிசீலனையில் உள்ளது. மேலும் திருத்தங்கள் இல்லையெனில வரும் புதன்கிழமை கட்சித் தலைவர்கள் இதில் கைச்சாத்திடுவார்கள் எனவும், அடுத்த ஒரு – இரு தினங்களில் இது இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
‘தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கை என்ன என்பதை திட்டவட்டமாகத் தெரியப்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு தெரியப்படுத்தினால் மட்டுமே இவ்விடயத்தில் தம்மால் தலையிட்டு, கொழும்புக்கு அழுத்தத்தைக் கொடுக்க முடியும்’ எனவும் இந்தியத் தரப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்தே பொதுவான கோரிக்கை ஒன்றை முன்வைப்பதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை ரெலோ முன்னெடுத்திருந்தது. ரெலோவின் முன்னெடுப்பில் தாமும் பின்னால் செல்வதா என்ற கௌரவப் பிரச்சினை தமிழரசுக்கு. அதனால், முன்னைய கூட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டாலும், சில திருத்தங்களுடன் தமிழரசுக் கட்சி நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றது.
புதிய அரசியலமைப்பு ஒன்றைக்கொண்டுவருவதன் மூலம் அதிகாரப் பரவலாக்கலையும், மாகாண சபைகளையும் இல்லாதொழிப்பதற்கான திட்டத்துடன் கோட்டாபய ராஜபக்ச அரசு செயற்பட்டுவரும் நிலையில், இந்தியாவை அவசரமாக தலையிடச் செய்வதற்கான முயற்சிதான் இது.
13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் ஏற்கனவே இருக்கின்றது என்ற நிலையிலும், அது இலங்கை – இந்திய உடன்படிக்கை மூலமாகக் கொண்டுவரப்பட்டது என்ற முறையிலும், இவ்விடயத்தில் தலையிடுவதற்கான உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்ற நிலையில்தான் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கை – இந்திய உடன்படிக்கைஇந்தியாவைப் பொறுத்தவரையிலும், இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை அது எதிர்பார்த்திருந்தது. இலங்கை – இந்திய உடன்படிக்கையைப் பயன்படுத்தி இவ்விடயத்தில் தலையிடுவது, சட்டரீதியான ஒன்றாக அமையும் என புதுடில்லியும் கருதுவதாகத் தெரிகின்றது.
தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் இந்த முயற்சியில் பல தடைகளை அவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக தமிழரசுக் கட்சியின் மேலாதிக்க மனப்பான்மையால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தாண்டிச் செல்லவேண்டியிருந்தது. அதேபோல, 13 க்குள் தீர்வை முடக்கும் சதி எனவும், இந்தியாவிடம் மண்டியிடும் நிலை எனவும் இந்த முயற்சி விமர்சிக்கப்பட்டது. ஆனால், தமிழ்க் கட்சிகளின் சார்பில் அதற்குத் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.
11 தமிழ் முஸ்லிம் மலையக கட்சிகள் இணைந்திருப்பது வரலாற்றில் இதுதான் முதல்முறை என்பதால் இது முக்கியத்துவம் பெறுகின்றது. இவர்கள் அனுப்பிவைக்கப் போகும் கடிதம் இந்தியாவின் அணுகுமுறையை மாற்றியமைக்குமா?