தமிழ் இளைஞர்களை பொலிசில் இணைத்தால் அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக இருப்பார்கள் – பொலிஸ் மா அதிபர்

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, தமிழ் இளைஞர்களிடம் ஆயுதத்தையும் வழங்கினால் அவர்கள் தனிநாட்டு போரை ஆரம்பித்து விடுவார்கள் என தென்னிலங்கை தீவிரவாத தரப்புக்கள் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் மாறான கருத்தை தெரிவித்துள்ளார் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண.

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, தமிழ் இளைஞர்களை அதில் இணைத்து, ஆயுதத்தை வழங்கினால், அவர்கள் அரசுக்கு எதிராக போராடுவார்கள் என நம்பவில்லை. தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தால், அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக செயற்படுவார்கள். இப்போது அப்படித்தான் செயற்படுகிறார்கள்“. இதுதான் அவரது கருத்து.

நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்குமிடையில் நடந்த சந்திப்பின் போது, இப்படி குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய சந்திப்பில் – பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களிற்கு- வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு ஏன் தேவை?, இப்போதைய பொலிஸ் அமைப்பு தொடர்வதில் என்ன சிக்கல் என்பதை அறியவே டிரான் அலஸ் ஆர்வம் காட்டினார்.

ஏனைய அதிகாரங்கள் இருந்தாலும், பொலிஸ் அதிகாரம் இல்லாவிட்டால், மாகாண முதல்வரால் அவற்றை பிரயோகிக்கவோ, தீர்வை காணவோ முடியாது உள்ளிட்ட காரணங்களை- நிர்வாக ரீதியாக சுட்டிக்காட்டி தமிழ் தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

13வது திருத்தத்தின்படி பொலிஸ் ஆணைக்குழுவில் முதல்வர் ஒருவரையே நியமிக்க முடியம் என்பதையும், மத்திய அரசே 2 பேரை நியமிக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுகிறது என்பது, மாகாணங்கள் சுயாதீனமாக பொலிசை கையாள்வதல்ல என்பதை தமிழ் தரப்பினர் விளக்கமளித்தனர்.

இந்த சந்திப்பின் ஒரு கட்டத்திலேயே- இந்த பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தகவல்களை பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதால், அவர்கள் அரசுக்கு எதிராக போராடுவார்கள் என நம்புகிறீர்களா?“ என தமிழ் தரப்பினர் ஒரு கட்டத்தில் கேட்டனர்.

தான் அப்படி நம்பவில்லையென பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஆரம்ப காலத்தில் பல தமிழ் பொலிசார் கடமையிலிருந்தாலும், பா.நடேசன் (விடுதலைப் புலிகளின் காவல்துறை பொறுப்பாளர்) ஒருவரே புலிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராடியதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தால், அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக செயற்படுவார்கள் என்பதில் தனக்கு சந்தேகம் இல்லையென்றும், இப்பொழுதும் அப்படியே செயற்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.