தமிழ் ஈழத்திற்கான மக்கள் ஆணை கிடைத்து 46 ஆண்டுகள் என்பது வீரசேகரவுக்கு தெரியாதா என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் குகதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது..
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவர்கள் அமெரிக்கா விசா கிடைக்காத நிலையில் நீதிபதி சரவணராஐா விவகாரத்திலும் ஆட்டம் கண்டு புலம்பியவர் தற்போது புதுக் கயிறு விடுவது போல தமிழர்கள் ஆயுத பலத்தால் கிடைக்காத தமிழீழத்தை பதின்மூன்றாம் திருத்தம் மூலம் பெற முட்படுகிறார்கள் என முட்டாள் தனமாக சிங்கள அப்பாவி மக்களை ஏமாற்றி தனது அரசியல் பிழைப்பை நடாத்த அறிக்கை விட்டுள்ளார்.
சரத் வீரசேகரவுக்கு வரலாறு தெரியாவிட்டால் 1977 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் திணைக்களத்தில் இருக்கும். அதனை எடுத்து பாருங்கள் எனக் கூறிவைக் விரும்புகிறோம்.
அந்த விஞ்ஞாபனத்தின் பிரதான கோரிக்கை தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பை மக்கள் ஆணையாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கோரியுள்ளனர்.
இதற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த ஒட்டுமொத்த தமிழ் மக்களும் முழுமையான ஆணையை வழங்கினர்.
வடக்கு கிழக்கில் 19 தொகுதிகளில் 18 தொகுதி தமிழீழத்திற்கான ஆணையாக 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினார்கள்.
19 தொகுதியாகிய கல்குடாவில் 577 வாக்குகள் பின்னடைவு ஏற்பட்டது ஆனால் 95% மக்கள் தமிழீழத்திற்கான சர்வசன வாக்காக தமது ஆதரவை வழங்கினர்.
இப்படியான தமிழ் மக்களின் ஐனநாயக கோரிக்கையை சிங்கள ஆட்சியாளர் மறுத்து வன்முறையை கட்டவிழ்த்ததன் விளைவே நாட்டின் இன்றைய அவல நிலைக்கு மிகப் பிரதான காரணம்.
பதின்மூன்றாம் திருத்தம் தற்போதைய அரசியல் அமைப்பில் ஒரு இடைச் செருகலாகவே உள்ளது.
முழுமையான அதிகாரங்களை முறைப்படி மாகாணங்களுக்கு பகிரப்படவில்லை என்பது இலங்கையில் வாழும் சாதாரண குடி மகனுக்கும் தெரியும். ஆனால் வீரசேகர இதனை பெரிய நாகபாம்பு போல காட்டி இனவாதம் பேசுகிறார்.
இலங்கைத் தீவில் எதிர்காலத்தில் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச பூகோள பிராந்திய சக்திகள் தமிழீழத்தை உருவாக்கியே தங்களது அடுத்த கட்ட பூகோள அரசியலை நகர்த்த முடியும் என்ற கசப்பான உண்மையை சரத் வீரசேகர புரிந்தான் ஆக வேண்டும் என்றார்.