தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வழங்க தென்னிலங்கை சக்திகள் தயாரில்லை – சபா.குகதாஸ்

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை ஐக்கிய இலங்கைக்குள் ஏற்படுத்தக் கூடிய அரசியல் அமைப்பை உருவாக்க கூடிய நிலைப்பாட்டை தென்னிலங்கை சக்திகள் எவரும் தயாராகவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் இன்றையதினம்(13) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய இனப்பிரச்சினை என்ற விடயத்தை மறைத்து தமிழர்களின் பெரும் தியாகத்தை ஒரே நிகழ்ச்சி நிரலில் சிதைக்க வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் பிரதான மூன்று சிங்கள வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்த அணியும் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் அற்ற 13ம் திருத்தத்துக்குள் தமிழர்களை சிக்க வைத்து வாக்குகளை கபளீகரம் செய்து விடலாம் என்ற கனவுடன் யாழ்ப்பாணத்தில் தமது உரையாடலை ஆரம்பித்துள்ளனர்.

தென்னிலங்கையில் பௌத்த சிங்கள நாடு என்ற கோட்பாட்டை பாதுகாப்பதுடன் சமஷ்டி மற்றும் 13ம் திருத்தம் என்பவற்றுக்கான பேச்சுக்கூட எவருடனும் இருக்காது என சிங்கள மக்களுக்கு சத்தியம் செய்யாத குறையாக உரையாடும் அதே தரப்பு வடக்கில் யாழ்ப்பாணத்தில் அதற்கு எதிரான நிலையில் உரையாடுகின்றனர்.

பூகோள நாடுகளுக்கு தமிழர் தரப்பு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஏற்று விட்டார்கள் என்ற விம்பத்தை உருவாக்கவும் அதன் மூலம் கடந்த கால உயர்ந்த பட்ச கோரிக்கைகளில் இருந்து கீழ் இறங்கி விட்டனர் என்ற நிலையை வெளியில் காட்டவும் சிங்கள பேரினவாதம் வேறுபட்ட முகாங்களில் இருந்தாலும் தமிழர் விடயத்தில் ஒரே நிகழ்ச்சி நிரலில் நகருகின்றனர்.

தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை ஐக்கிய இலங்கைக்குள் ஏற்படுத்தக் கூடிய அரசியல் அமைப்பை உருவாக்க கூடிய நிலைப்பாட்டை தென்னிலங்கை சக்திகள் எவரும் கொண்டிருக்க வில்லை என்ற மனோநிலை யாழில் நடைபெறும் சந்திப்புக்கள் உறுதி செய்துள்ளன.

தமிழர் தரப்பு நிதானமாக சிந்தித்து உறுதியான முடிவுகளை எடுக்கவிட்டால் விலை மதிப்பிட முடியாத தியாகங்கள் கரைந்து போய்விடும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.