காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் காரைக்கால் துறைமுகம் இடையே படகு சேவை திட்டமிட்டபடி ஏப்ரல் 29ஆம் திகதி தொடங்கும்.
திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளதாக கப்பல் சேவையை நடத்தவுள்ள Indsri Ferry Service Pvt Ltd நிறுவன தலைவர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.
இலங்கை கடற்படை தற்போது சுங்க மற்றும் குடிவரவு கட்டிடங்கள் மற்றும் பயணிகளுக்கான புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில், படகு சேவைக்கான உள்கட்டமைப்பைக் கட்டமைக்க இந்திய அரசாங்கம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால், இந்தத் திட்டம் பின்னர் தாமதமானது. காங்கேசன்துறை துறைமுகத்தை மேலும் ஆழப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்குமிடையில் ஆரம்ப கட்ட சேவையில் ஈடுபடும் படகுகளை விட பெரிய படகுகளுக்கு இடமளிப்பதற்கும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு மேலும் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன.
ஆரம்பத்தில், படகுகள் வாரத்தில் ஆறு நாட்களுக்கும் சேவையில் ஈடுபடும். ஒரு பயணத்தில் 120 பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சேவை இயங்காது.
காங்கேசன்துறை- காரைக்கால் படகுப் பயணம் அண்ணளவாக 4 மணித்தியாலமென மதிப்பிடப்பட்டுள்ளது.