தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையா இனப்பிரச்சினைக்கு தீர்வு? அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் முதலில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். தமிழ் அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. ஆகவே தீர்வு சாத்தியமற்றது என குறிப்பிடும் நிலையை தமிழ் தரப்பு தோற்றுவிக்க கூடாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (30) புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில்,வர்த்தக,வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு,மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அவரது ஆட்சிக்காலத்தில் அவதானம் செலுத்தாமல் தற்போது மாவட்ட அபிவிருத்தி சபை ஊடாக தீர்வு வழங்க வேண்டும் என குறிப்பிடுகிறார்.அதற்கு சார்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அரசியல் தீர்வு வழங்க தயார் என குறிப்பிட்டார்.பிரதான எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை எழுப்பி தீர்வு வழங்க தயாரா என கேள்வி எழுப்பினார்.பிரதான எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்தன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என குறிப்பிட்டார்.
சமஷ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி குழு பற்றி தற்போது குறிப்பிடப்படுகிறது. தோல்வியடைந்த இந்த திட்டத்தின் ஊடாகவா அரசியல் பிரச்சினைக்கு தீர்வு என்பது கவலைக்குரியதாக உள்ளது.
சமஸ்டி முறையிலான தீர்வு விடயத்தில் தமிழ் தரப்புகள் முதலில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.தீர்வு விவகாரத்தில் தமிழ் தரப்புகள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாடு இல்லை,ஆகவே தீர்வு கைநழுவி சென்று விட்டது என ஆட்சியாளர்கள் குறிப்பிடும் நிலையை தோற்றுவிக்க வேண்டாம் என்பதை தமிழ் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.