தேர்தலை பிற்போட சூழ்ச்சிகள் செய்யும் அரசாங்கம் – உதய கம்மன்பில

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான அறிவிப்பை ஆணைக்குழு வெளியிடும் என எதிர்பார்த்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்த ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் தேர்தலை ஏதாவதொரு வழிமுறையில் பிற்போடுவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இருமுனை போட்டி நிலவுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தேர்தலை நடத்துவதை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.