உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு திறைச்சேரியின் செயலாளர், நிதியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிந்த நிலையில், திறைச்சேரியின் செயலாளர் உட்பட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று (16) பிரசன்னமாகவில்லை என அறிய முடிகிறது.
தபால் மூல வாக்கெடுப்பு மற்றும் மார்ச் 09 திகதி வாக்கெடுப்பு தொடர்பில் இவ்வார காலத்திற்குள் உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தபால்மூல வாக்கெடுப்பிற்கு தேவையான வாக்குச் சீட்டு அச்சிடல் பணிகள் நிதி நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திறைச்சேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட நிதியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த பேச்சுவார்த்தை வியாழக்கிழமை (16) காலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெறவிருந்த நிலையில் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள திறைச்சேரியின் செயலாளர் உட்டப ஏனைய அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என அறிய முடிகிறது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திறைச்சேரியிடம் 800 மில்லியன் ரூபாவை கோரியிருந்த நிலையில் அந்த தொகை முழுமையாக கிடைக்கப் பெறவில்லை என அறிய முடிகிறது.
வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு 400 மில்லியன் ரூபா செலவாகும் என அரச அச்சகத் திணைக்களம் மதிப்பட்டுள்ள நிலையில் வாக்குச்சீட்டு அச்சிடலுக்காக 40 மில்லியன் ரூபாவை திறைச்சேரி அரச அச்சகத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது.
முழுமையான தொகை வழங்க வேண்டும் அல்லது 200 மில்லியன் ரூபா முற்பணத்தை வழங்க வேண்டும் இல்லாவிடின் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை தொடர முடியாது என குறிப்பிட்டு அரச அச்சகத் திணைக்களம் கடந்த திங்கட்கிழமை இடைநிறுத்தியது.
வாக்குச்சீட்டு அச்சிடல் இடைநிறுத்தப்பட்டதால் கடந்த 15 ஆம் திகதி விநியோகிக்கப்படவிருந்த தபால் மூல வாக்குச்சீட்டு விநியோகம் மறுஅறிவித்தல் விடுக்கும் வரை பிற்போடப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் 50 சதவீதமளவில் நிறைவுப் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த நிதி நெருக்கடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இவ்வாறான பின்னணியில் வியாழன் (16) திறைச்சேரியின் செயலாளருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்தது.
இவ்வாறான பின்னணியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இவ்வார காலத்திற்குள் ஒரு உத்தியோகப்பூர்வமான தீர்மானத்தை அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.