மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை தவறு – பஷில்

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை எனவும், அவர்தான் இப்போதும் பிரதமராக இருந்திருக்க வேண்டும் எனவும்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியது மொட்டுக் கட்சியினர் அல்லர் எனவும், போராட்டக்காரர்களே அவரைப் பிரதமராக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள்தான் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும், எதிர்க்கட்சியில் இருந்து ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் கோரினார்கள் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்தவே பிரதமராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவைத் தவிர வேறு எவரையும் பிரதமராக நியமிப்பதற்கு விருப்பம் இல்லை என உறுதியாகக் கூறியதாகவும், எனினும், கோட்டாபய அவரது விருப்பத்தின்படி ரணிலைப் பிரதமராக நியமித்தார் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு மக்கள் ஆணை இல்லை எனவும், அவரைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குங்கள் என கோட்டாவுக்குக் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால்தான் அவர் ரணிலைப் பிரதமராக நியமித்தார் எனவும் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கும் பின்னர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமைக்கும் தங்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் நாடாளுமன்றின் ஊடாக ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை வந்தபோது அப்போதைய வேட்பாளர்களை ஆராய்ந்து பார்த்து ரணிலை ஜனாதிபதியாக்குவதற்கு தாங்கள் முடிவெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை எனவும், அவர்தான் இப்போதும் பிரதமராக இருந்திருக்க வேண்டும் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.