நாட்டில் அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது – முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசியல் அழுத்தம் எல்லையை மீறியுள்ளதால் சுயாதீன நிறுவனங்களிலும், கூட்டுத்தாபனங்களிலும் நிறுவன பிரதானிகள் பதவி விலகுகின்றனர் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் செயற்பாடு சிறுபிள்ளைத் தனமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு வரை அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாடு மீள வேண்டும் என்பதற்காகவே 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முன்னின்று செயற்பட்டோம்.

மக்களும் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் இன்று அனைவரின் எதிர்பார்ப்பும் பொய்யாக்கப்பட்டுள்ளது. தவறை திருத்திக் கொண்டு அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினோம்.

எமது ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. தற்போது கடுமையாக விமர்சிக்கிறோம் அதனையும் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. ஆகவே இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. 2024 ஆம் ஆண்டு வரை அனைத்தையும் சகித்துக் கொண்டிருக்கத் தீர்மானித்துள்ளோம்.

ஆட்சி மாற்றத்திற்கு முன்னின்று செயற்படுவதால் மக்கள் வினவும் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.