நாட்டில் இன ஐக்கியம் நிலவ வேண்டுமென்றால் அதிகாரங்கள் பரவலாக்கப்படல் வேண்டும் : கருணாகரம் எம்.பி !

வெளிநாட்டமைச்சர் அலிசப்றி பல நாடுகளுக்குச் சென்று வருகின்றார். கடந்த பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையை நாங்கள் வரவேற்கின்றோம். சமஷ்டி அதிகாரப் பரவலாக்கல் நடைபெற்றால் நாடு பிளவுபடும் என்று கூறுபவர்கள் வெளிநாட்டமைச்சர் கூறியிருக்கும் தமிழர்கள் சமஷ்டியைக் கோருவதற்கு உரித்துடையவர்கள், தகுதியுடையவர்கள் என்பதனை உணர்வதுடன் அவரது உதாரணங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

உண்மையிலேயே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு இந்த நாட்டிற்குத் தேவையென்றால், இந்த நாடு பொருளாதாரரீதியாக முன்னேற்றமாக நகரவேண்டுமென்றால், சுபீட்சம் நிலவ வேண்டுமென்றால், இன ஐக்கியம் நிலவ வேண்டுமென்றால் பொலிஸ் அதிகாரம் உட்பட அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதற்கான வழிவகைகள் செய்யப்படல் வேண்டும்.

தற்போதைய வெளிநாட்டமைச்சர் பல நாடுகளுக்குச் சென்று வருகின்றானர். கடந்த பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையை நாங்கள் வரவேற்கின்றோம். அவர் உணர்ந்திருக்கின்றார். அவர் உண்மையிலேயே கோட்டபாயவினால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர். கோட்டபாயவின் தனிப்பட்ட ஆஸ்த்தான சட்டத்தரணியாக இருந்தவர். தற்போது வெளிநாட்டமைச்சராக இருக்கிறார். அவரது கூற்று வரவேற்கத்தக்கது. அதை ஏனைய அரசியல்வாதிகள் உட்பட புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் வெளிநாட்டமைச்சர் கூறுகின்றார் தமிழர்கள் சமஷ்டியைக் கோருவதற்கு உரித்துடையவர்கள், தகுதியுடையவர்கள் என்று கூறியிருக்கின்றார். சமஷ்டி அதிகாரப்பரவலாக்கல் இந்த நாட்டில் நடக்குமாக இருந்தால் நாடு பிளவுபடும் என்று கூறுபவர்கள் உணரவேண்டும்.

அதிகாரப்பரவலாக்கல் ஊடாக இந்த நாடு பிளவுபடும் என்பது பொய்யானது அதிகாரங்களைப் பரவலாக்கலாம், அதற்கு அவர் பல உதாரணம் காட்டியிருக்கின்றார். சுவிஸ்லாந்தைக் காட்டியிருக்கின்றார். இலங்கை ஒரு சிறிய நாடு இங்கு அதிகாரங்களைப் பரவலாக்க முடியாது என்பவர்களுக்கும் ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றார்.

பெல்ஜியம் இலங்கையை விடச் சிறிய நாடு ஆனால் அங்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு தற்போது பெல்ஜியம் வளர்ச்சியடைந்த நாடாக ஐரோப்பாவில் இருக்கின்றது. எனவே இலங்கையைப் பொறுத்தமட்டில் அதிகாரங்களைப் பரவலாக்கி மாகாணங்களுக்கு பூரணமான அதிகாரங்களைக் கொடுத்தால் இந்த நாடும் புலம்பெயர் தேசத்துத் தமிழ்த் தனவந்தர்கள் முதலீடு செய்வார்கள் என அவர் இதன்போது தெரிவிததுள்ளார்.