நாட்டில் வெளிநாட்டுச் செலவாணி பற்றாக்குறை! ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் ‘டொலர் வீரர்களாக” வேலை செய்யவேண்டும்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் பணியாற்றும் அனைவரையும் பணியாற்ற அழைக்க முடியாமையால் கிடைத்திருக்கும் ஓடர்களை சரியான நேரத்தில் வழங்க முடியாமல் ஆடைத் தொழில் துறை பாதிக்கப்படக் கூடுமென தைத்த ஆடைகள் ஏற்றுமதி வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் ஹேமந்த பெரேரா கூறுகிறார்.

Daily Mirror பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அவர், தற்போது ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு வருபவர்கள்; குறைக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலை திறனில் 75 -85 வீதம் மாத்திரமே செயற்படுவதாகக் கூறியுள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் ஆடைத் தொழிற்சாலைகளின் இலக்கை அடைவதற்காக செயற்பட வேண்டுமெனவும், குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக ஊழியர்களை சேவைக்கு அழைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், தொழிற்சாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் கூடியளவு செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

நாட்டில் வெளிநாட்டுச் செலவாணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தைத்த ஆடைகளின் வருமானத்தை கூடுதலாகப் பெற வேண்டியுள்ளதாக மேற்படி சங்கத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் இறக்குமதி மற்றும் கொவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்காக நாட்டுக்கு அதிகளவு டொலர் தேவைப்படுவதாகக் கூறும் ஹேமந்த பெரேரா, ஆடைத் தொழிற்சாலைகள் கூடிய திறனுடன் செயற்படும் பட்சத்தில் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் ‘டொலர் வீரர்’களா ஆவர் எனவும்; கூறியுள்ளார். சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ள ஹேமந்த பெரோரா, இஸபெல்லா ஆடை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமாவார்.

தொற்றுநோய் வேகமாக வியாபிப்பதைத் தடுப்பதற்காக அரசாங்கம் கடந்த 20ம் திகதி 10 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினாலும், ஆடைத் தொழிற்சாலைகளை மூடவில்லை. எவ்வாறாயினும், ஆடைத் தொழிற்சாலைகளை செயற்படுத்தும் போது தற்போதைய வேலைத்தளங்களில் திறனுக்கேற்ப 50 வீத ஊழியர்களை அல்லது அதற்குக் குறைவான ஊழியர்களை பணியில் அமர்த்துமாறு சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

கடந்த வருட ஒக்டோபர் மாதம் இரண்டாவது கோவிட அலை நாட்டில் வியாபிக்கக் காரணமாக இருந்தது சரியான நடைமுறைகளின்றி ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்ற வேண்டியிருந்தமைதான். சில நிறுவனங்களின் முகாமையாளர்கள் கிருமிநாசினிக்கு செலவு செய்யாமல் ஊழியர்களிடமிருந்து இலக்கை அடைந்து அதிக லாபமீட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தப் பின்னணியில், கடந்த வருடம் பங்குச் சந்தையில் அதிக லாபமீட்டிய நிறுவனங்களில் ஆடை உற்பத்தி நிறுவனங்களும் அடங்குகின்றன.