நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, அந்த தலைவர்களிடமிருந்து நாட்டு மக்கள் நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம். அத்துடன் நிகழ்நிலை காப்புச்சட்டத்தையும் மறுசீரமைப்பு செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான பிரதான கருவி தனியார் துறையாகும். அதனால் இதன் மூலம் நாட்டின் விரைவான பொருளாதார அபிவிருத்தியை நாங்கள் எதிர்பாக்கிறோம்.
அதேபோன்று எமது அரசாங்கத்தில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முறையான முகாமைத்துவத்துக்கு உட்படுத்தி, தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் கலந்துரையாடல் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
இதன் மூலம் நாணய நிதியத்தை புரக்கணித்து செயற்படுவதென யாரும் அர்த்தம் கொள்ளக்கூடாது. நாணய நிதியத்துடன் இணைந்துகொண்டே இந்த பயணத்தை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் எமது பொருளாதார கொள்கையின் மூலம் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தை நாங்கள் செயற்படுத்துவோம்.
அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மேலும் பலப்படுத்துவதுடன் அந்த சட்டத்தை அரசியலமைப்பில் ஓர் பிரிவாக கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்.
அத்துடன் நாட்டின் ஏற்றுமதி துறை வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்.
அதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம். மேலும் நாட்டின் பொருளாதாரத்தின் என்ஜினாக இருப்பது சிறிய, நடுத்தர, நுண் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களாகும். நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 50வீத பங்களிப்பை வழங்கி வருகின்றன.
ஆனால் பராடே சட்டத்தின் மூலம் இந்த பிரிவினர் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசாங்கம் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.
அதனால் எமது அரசாங்கத்தில் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் முன்னெடுப்போம். மாறாக அஸ்வெசும போன்ற தேர்தலை இலக்குவைத்து ஏழை மக்களுக்கு சிறியதொரு தொகையை கையளிப்பது போன்று அல்ல.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் எமது திட்டத்தில் நாடு இழந்த வளங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள நாங்கள் செயற்படுவோம்.
அதேபோன்று நாடு வங்குராேத்து நிலைக்கு செல்ல காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, அந்த தலைவர்களிடமிருந்து நாட்டு மக்கள் நஷ்டஈடு பெற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் எமது அரசாங்கத்தின் நடவடிக்கை எடுப்போம்.
அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாங்கள் சமர்த்திருக்கும் திட்டங்களில் கல்வி துறையில் மாற்றம், தகவல் தொழிநுட்ப துறையை விரிவுபடுத்தல், விவசாயம், கடற்றொழில் துறையை விருத்தி செய்தல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை பலப்படுத்தல், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், சுதந்திர ஊடகத்தை பாதுகாத்து தற்போதுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மறுசீரமைப்பு செய்து அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி முறையான சட்டத்தை கொண்டுவருவோம் என்றார்.