உயர் நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து விசாரணை செய்வது மீண்டும் ஆராயப்படுமென எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை அறிக்கை
இலங்கை பாராளுமன்றத்தின் தெரிவுக்குழு முன்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து விசாரணை செய்வதில் உள்ள பாரதூரத்தன்மை தொடர்பில் மீண்டும் ஆராயப்படுமென தாம் எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் தொடர்புடைய நீதிபதிகளை பாராளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்க தரப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை இன்று அறிக்கை வௌியிட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை என்பது 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முறை சட்டத்தரணிகளைக் கொண்ட, பொது உரிமைகள் மற்றும் சட்ட அமுலாக்கத்திற்கான முன்னணி சர்வதேச சட்டத்தரணிகளின் அமைப்புகளில் ஒன்றாகும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுகிறதா என்பது கண்டறியப்படும் வரை, இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எழுப்பிய சிறப்புரிமைப் பிரச்சினையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் BAR கவுன்சில் நினைவுகூர்ந்துள்ளது.
“நீதித்துறை செயற்பாட்டில் தகாத அல்லது தேவையற்ற தலையீடு இருக்கக்கூடாது” என்பதும் “நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து கடைப்பிடிப்பது அரச மற்றும் பிற நிறுவனங்களின் கடமை” என்பதும் ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை கோட்பாடு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சுதந்திரமான நீதித்துறை என்பது சட்டவாட்சியின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியென “இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவையின் தலைவர் Nick Vineall KC-இன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.