நீதிமன்ற கட்டளையை மீறி முற்றுப் பெற்றுள்ள குருந்தூர்மலை பௌத்த கட்டுமானம்

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு அமைந்துள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06/2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்து பேணுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை ஆகியிருந்தது.

இருந்த போதிலும் இந்த கட்டளையை மீறியும் தொடர்ந்து கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டளையையும் மீறி அங்கு கட்டுமான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அது தொடர்பில் குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தினரும் அரசியல் பிரதிநிதிகளும் குருந்தூர் மலை பகுதியில் கடந்த 2022/09/20 அன்று போராட்டம் செய்திருந்தனர்.

அதன் தொடர்சியாக 21/09/2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வேறு சில B அறிக்கைகள் தாக்கல் செய்யப்ட்டிருந்ததோடு ஆதி அய்யனார் ஆலயம் சார்பில் சட்டதரணிகளால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்த கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான கட்டளைகாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் ஒரு கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

அதாவது கடந்த 19.07.22 அன்று ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்கள்களை குருந்தூர்மலையில் அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதமுடியும் என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளைகளை வழங்கியுள்ளது.

இந்த கட்டளை வழங்கப்படும்போது பூரணமடையாத நிலையில் காணப்பட்ட குருந்தூர்மலை விகாரை கட்டுமானம் தொடர்சியாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு தற்போது பூர்த்தியாக்கப்பட்டுள்ளதை இன்றையதினம் (23) குருந்தூர்மலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவநேசன் ஆகியோர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இவர்கள் குருந்தூர்மலைக்கு சென்ற வேளை அங்கு தொடர்சியாக பௌத்த கட்டுமானம் வேலைகள் இன்று கூட இடம்பெற்றுள்ளதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது, இரவு நேரத்தில் இந்த கட்டுமானங்கள் தொடர்சியாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்கும் வகையில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள அடையாளங்கள் காணப்பட்டுள்ளது.

இவ்வாறான கடுமானங்கள் இடம்பெறும் நேரத்தில் 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பும் அப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

– ஒளிப்படங்கள் – கே .குமணன்