பங்காளிக் கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி கோட்டா!

கெரவலபிட்டிய மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திடம் வழங்கும் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

மின்நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முடிவு குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் பங்காளி கட்சிகளினால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்த பிரச்சினையைப் பற்றி விவாதிக்க வேண்டும் என கோரி பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலமான கோரிக்கையை விடுத்திருந்தனர்.

எனவே அந்தக் கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள ஜனாதிபதி கோட்டாபய, அரசியல் முடிவுகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால், கட்சியின் தலைவர், பிரதமர் அல்லது கட்சியின் தேசிய அமைப்பாளருடன் கலந்துரையாடுமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக ஆளும் பங்காளி கட்சிகள் கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருந்தது.

எனவே அந்த சந்திப்பில் திருப்தி இல்லை என குறிப்பிட்டு ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவதற்கு 11 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தீர்மானித்திருந்த நிலையில் ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.

குறித்த கடிதத்திற்கு அனுப்பிய பதிலிலேயே ஜனாதிபதி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் சந்தித்து இந்த விடயம் தொடர்பாக விவாதிக்க உள்ளனர்.