பசில் ஜனாதிபதியாகும் நோக்கிலேயே பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்தார் – கம்மன்பில

பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பஷில் ராஜபக்ஷ பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தினார். பிரச்சினைக்கு தீர்வு காண முன்வைத்த திட்டங்களுக்கு அவர் பாரிய தடையாக இருந்தார்.

நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய சாகர காரியவசம் தலைமையிலான குழு பயனற்றது என்பதை சபாநாயகர் அறியாவிட்டாலும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொலிஸ்மா அதிபர் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற சி.டி.விக்கிரமரத்னவுக்கு மூன்று மாதகாலம் சேவை நீடிக்கப்பட்டுள்ளமை சட்டத்துக்கு முரணானதாகும். அரசியலமைப்பின் 41 (எ) 1 பிரிவின் பிரகாரம், அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் அரச உயர்பதவிகளின் நியமனம் இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு மார்ச் மாதம் 28ஆம் திகதி மூன்று மாதகால சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. இதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை. ஏப்ரல் 01ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியது.

அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் தான் அரச உயர்பதவிகளுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போது நியமனம் வழங்கப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பு பேரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படுகிறது. பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் நீடிப்பு சட்ட விரோதமானது. சட்டத்துக்கு அமைய பொலிஸ்மா அதிபர் நியமனம் இல்லாமல் நாடு இயங்குகிறது.

பொருளாதாரப் பாதிப்பு தொடர்பில் ஆராய பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு பயனற்றது என்பதை சபாநாயகர் அறியாவிட்டாலும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தை பலவீனப்படுத்தி பாராளுமன்றத்தின் ஊடாக பொதுஜன பெரமுனவின் பலத்துடன் ஜனாதிபதியாகும் நோக்கத்தோடு பஷில் ராஜபக்ஷ பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தினார். பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண அமைச்சரவையில் பல யோசனை முன்வைக்கப்பட்டபோது பஷில் ராஜபக்ஷ அதற்கு தடையாக செயற்பட்டார்.

பஷில் ராஜபக்ஷ வகுத்த திட்டம் ஒன்று, நடந்தது பிறிதொன்று. கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கும் அளவுக்கு பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்தது.

பொருளாதாரப் பாதிப்புக்கு பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்துள்ள நிலையில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கபுடா குழுவில் அங்கம் வகிக்க முடியாது என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் விலகியுள்ளார்கள் என்றார்.