படுகொலை செய்தவர்களை மீண்டும் படுகொலை செய்கிறது கோட்டாபய அரசாங்கம் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு இலங்கை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் 1983 யூலை மாதம் 23 திகதியில் இருந்து 27 வரை நான்காயிரத்திற்கு அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

வெலிக்கடைச் சிறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட விடுதலைப் போராளிகள் உள்ளிட்ட 53 பேர் வெட்டியும் கொத்தியும் படுகொலை செய்யப்பட்டு கைதிகளின் உடல் உறுப்புக்கள் வெட்டப்பட்டு காடையர்களால் புத்த பிரானுக்கு படைக்கப்பட்டன. கைதிகளின் குருதியை காடையர்கள் குடித்து கூத்தாடினர்.

இதனை கறுப்பு யூலைப் படுகொலை என்ற பெயரில் 37 ஆண்டுகளாக சுவர் ஒட்டிகள் ஒட்டி தமிழர் தாயகம் எங்கும் நினைவேந்தப்பட்டு வருகின்றது.

இம்முறை 38 ஆண்டு நினைவேந்தலுக்குகான சுவர் ஒட்டிகள் ஒட்டப்படும் போது தற்போதைய கோட்டாபய அரசாங்கம் இராணுவ இயந்திரத்தை தூண்டி சவர் ஒட்டிகளை கிழித்தும் கழிவு ஒயில் கொண்டு மறைத்தும் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய செயற்பாடுகள் ஏதேச்ச அதிகாரப் போக்குடன் படுகொலை செய்தவர்களை மீண்டும் படுகொலை செய்கின்ற கொடூரமான பாசிச நடவடிக்கையாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத போதும் அவர்களை நினைவேந்தல் செய்யக் கூட தடுத்தல் அப்பட்டமான மனிதவுரிமை மீறலாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்க ஆட்சியாளர்கள் நீதி கொடுக்கவே நினைவேந்தல் செய்ய அனுமதியே கொடுக்க தயார் இல்லை என்றால் தமிழ் மக்களுக்கு உள் நாட்டில் திட்டமிட்ட அடக்கு முறைகள் தொடரவுள்ளன என்பது உண்மை.