2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானத்திற்கும், அரச செலவிற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.
வரி அதிகரிப்பை மாத்திரம் இலக்காக கொண்ட இந்த வரவு செலவுத் திட்டத்தால் நடுத்தர மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானம் 3500 பில்லியன் ரூபாவாக காணப்படும் நிலையில் அரச செலவினம் 8000 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வருமானத்திற்கும்,செலவிற்கும் இடையிலான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் யோசனைகள் வரவு உள்ளடக்கப்படவில்லை.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்கும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் அமையவில்லை. பொருளாதார மீட்சிக்காக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
கடந்த 08 மாத காலத்தில் அரசாங்கம் அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ள முறையான திட்டங்களை வகுக்கவில்லை. வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மென்மேலும் பாதிக்கப்படுவார்கள்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அக்கறை கொள்ளவில்லை. சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்தால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றார்.