மக்கள் அன்றாடம் வாழமுடியாத நிலையில் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு மொத்த வரவு செலவு திட்டத்தில் 10வீதம் ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் கொள்கை அடிப்படையில் புதிய சீர்திருத்தங்களை மேற்காெள்ள ஜனாதிபதி எடுத்து வரும் முயற்சியை பாராட்டுகின்றோம்.
ஆனால் மக்கள் பாரிய வறுமை கோட்டின் கீழ் இருக்கும் நிலையில் மக்களுக்கு மானியங்கள் எதுவும் இல்லாத நிலையில் பாதுகாப்பு பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
குறிப்பாக வரவு செலவு திட்டத்தின் மொத்த தொகையில் 10வீதத்தை பாதுகாக்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்தளவு நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்குவதற்கு பாரிய அச்சறுத்தல்கள் எதுவும் இல்லை.
அத்துடன் இந்தியாகூட பாதுகாப்புக்கு வரவு செலவு திட்டத்தில் 9வீதமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் சிந்தித்திருக்கலாம் என்றார்.