மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மெளலானா தெரிவு

கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் நசீர் அகமட் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பு அரசியல் கட்சிகளுக்கு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைவதாக அலி சாஹிர் மௌலானா டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள தனது தொகுதி மக்களுக்கும், இலங்கைக்கும் உண்மையாக பணியாற்றவுள்ளதாக அலி சாஹிர் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு தொடர்பில் பேசும் போது முஸ்லிம் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படல் வேண்டும் ; ஹக்கீம் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களுடனும் தனியான பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரையைத் தொடர்ந்து அவரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது ரவூப் ஹக்கீம் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அதிகாரப் பகிர்வு நல்லிணக்கம் உட்பட முக்கிய பல சிறந்த விடயங்களை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் உரையாற்றினார். அது தொடர்பில் பிரிதொரு தினத்தில் விவாதம் நடத்த முடியும்.

சர்வ கட்சி மாநாடு தொடர்பில் தெரிவிக்கையில், சில கட்சிகள் அது தொடர்பான தப்பபிப்பிராயங்களை முன் வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு தொடர்பில் பேசும் போது முஸ்லிம் மக்கள் அங்கு முக்கிய பங்கினை வகிக்கின்றனர்.

அதனை கருத்திற்கொண்டு வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் உறுப்பினர்களுடனும் தனியான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும்.

அதே வேளை, உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அரசாங்க ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாம் ஏற்கனவே பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

நாம் கட்சித் தலைவர்கள் என்ற வகையில் முன் வைக்கும் கோரிக்கை என்னவெனில், உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறும் வரை அவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அரசாங்க ஊழியர்கள் அவர்களது கடமையை ஏற்கனவே அவர்கள் மேற்கொண்ட அலுவலகங்களில் முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறான பேச்சு வார்த்தையொன்றை முன்னெடுப்பதற்கு நான் தயார்.

வடக்கு, கிழக்கு மட்டுமன்றி அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு அந்த பேச்சு வார்த்தையை நடத்த முடியும்.

இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை நியமித்துள்ளோம். வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் பேசவேண்டும் என்றால் நீதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடலாம் என்றார்.

இதய சுத்தியுடன் ஜனாதிபதி அழைத்தால் பேச்சுவார்த்தைக்குச் செல்வோம் – ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினைக் காண்பதற்காக இதயசுத்தியுடன் ஜனாதிபதி அழைப்பு விடுத்தல் அதில் பங்கேற்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்காக தமிழ்த் தரப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறித்தது தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மலையக தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்புக்களையும் தனித்தனியாக சந்திப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான மிகப்பொருத்தமானதொரு தருணம் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த தரப்பினரும், ஏனைய தமிழ்த் தரப்புக்களும் பிரிந்து நிற்பது துரதிஷ்டமானது என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும் இரா.சம்பந்தனின் காலத்திற்குள் தமிழ், முஸ்லிம் மக்களினது விவகாரங்களுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு என்றும் அனைத்து விடயங்களும் விரைவில் சீர்செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட,கிழக்கில் தனித்துப் போட்டி – ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை (ஜன. 10) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது பற்றியும் எதிர்கால கட்சியின் செயற்றிட்டங்கள் பற்றியும் கலந்துரையாடும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வடக்கு, கிழக்கில் தனித்து தனது மரச் சின்னத்தில் போட்டியிடும்.

ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடும். இதன் மூலம்  பலத்தையும் கண்டுகொள்ள முடியும்.

தேர்தல் முடிந்த பிறகு கூட்டமைப்பு அமைப்பது தொடர்பில் யோசிப்போம். இதற்கு சஜித் பிரேமதாஸவும் உடன்பாட்டை தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலி சாஹீர் மெளலானா, கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீட், செயலாளர் நாயகம் /ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்கான குழுவொன்று பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டது.

சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என விசாரிக்கப்பட வேண்டும் – ஹக்கீம்

வேண்டுமென்றே வெறுப்புணர்வைத் தூண்டி அதன் மூலமாக எங்களுக்குச் செய்யப்பட்ட அநியாயங்களை நாங்கள் ஒரு போதும் மறந்து விடவோ கிடப்பில் போடவோ முடியாது. அவற்றுக்கு நியாயம் கோரி நிற்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் சனிக்கிழமை (நவ.26) தவிசாளர் விருது வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,

ஏப்ரல் 21 இன் பயங்கவாதக் கும்பலைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. ஆனால் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கும்பலின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினால் நினைவுகூரப்படுவதுமில்லை. நினைவுகூரப்பட வேண்டியதுமில்லை. அந்தச் செயலைச் செய்தவர்களுடைய ஜனாஸாக்களைக் கூட நாங்கள் பொறுப்பெடுக்கவில்லை. அவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதுதான் எங்களது முடிவு. அவர்கள் மேற்கொண்டது முஸ்லிம் சமூகத்திற்கான போராட்டமுமல்ல. இதற்குப் பின்னாலும் சில பெருந்தேசியவாதக் கழுகுக் கூட்டம் இருந்ததா என்பது கண்டு பிடிக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் வெறுப்புணர்ச்சியை முஸ்லிம்கள் மீது தூண்டி அதன் மூலமாக ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பாடுபட்டவர்கள் தாங்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின்னரும் முஸ்லிம் சமூகத்தைப் படாதபாடு படுத்தினார்கள். கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களுக்குச் செய்த அநியாயம் இவ்வாறு அவர்களது வெறுப்புணர்ச்சி எல்லை கடந்து சென்றது. இன்னமும் முஸ்லிம்களுக்குள் தீவிரவாதம் ஊடுருவியிருக்கிறது என்று நிரூபிக்கத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும், முள்ளிவாய்க்கால் சம்பவம் பற்றி விசாரிக்கப்பட வேண்டும். சரணடைந்தவர்களுடைய உயிர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை இப்பொழுது சர்வதேச சமூகத்திற்கு முன்னால் வைத்திருக்கிறார்கள். இவ்வாறு நடந்த அநியாயங்களைக் கண்டறிவதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைனக்துழுவொன்று அமைக்கப்படவுள்ளது.

அதேநேரம் அடுத்து வரும் அரசியல் என்பது வித்தியாசமாக நடக்கப் போகின்றது. அந்த வித்தியாசமான அரசியலில் முஸ்லிம் சமூகமாக இருக்கட்டும் தமிழ் சமூகமாக இருக்கட்டும் நாங்கள் எல்லோரும் மிகக் கவனமாகக் காய்நகர்த்தி சரியான இலக்குகளை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். என்னதான் பேசினாலும் துரோகச் செயல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு முடிவு காண முடியாது.

துரோகத்தைப் பற்றிப் பேசிப் பேசி காலத்தைக் கடத்துவதல்ல நோக்கம். தெற்கிலுள்ள சிங்கள சமூகத்தினரும் சிறுபான்மைச் சமூகத்தினரின் கோரிக்கைகள் நியாயமானது என்று நம்புகின்ற அளவக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அடைந்து கொள்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் இதுவென நான் நம்புகின்றேன்” என்றார்.

அனைவரும் அணிதிரண்டு இனப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – ரவூப் ஹக்கீம்

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சியை வரவேற்கின்றேன்.ஜனாதிபதியின் இந்த பிரவேசத்தை சிறந்த சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளவேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் அணிதிரண்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (நவ. 23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16 விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் தீர்வுப்பொது ஒன்றை கொண்டுவந்தார். அப்போது அவரின் அமைச்சரவையில் மஹிந்த ராஜபக்ஷ்வும் ஒரு அமைச்சராக செயற்பட்டிருந்தார்.

அந்த தீர்வுப்பில் பிராந்தியங்களின் ஒன்றிணைப்பு என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தற்போது வேறுமாதிரி குறிப்பிடப்படுகின்றது. அது பிரச்சினை அல்ல. ஆனால் அதிகார பரவலாக்கம் எவ்வாறு இடம்பெறுகின்றது. மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் அதிகார பரவலாக்கம் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதுதான் முக்கியமானது. அதனால் ஜனாதிபதி அதிகார பரவலாக்கம் தொடர்பாக சபையில் கருத்துக்களை கேட்டார். அதற்கு இணக்கமா என கேட்டார். ஜனாதிபதியின் இந்த பிரவேசத்தை சிறந்த சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

அதற்காக நாங்கள் அனைவரும் அணிதிரண்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதனால் இந்த விடயத்தில் மாறுபட்ட அரசியல் கருத்துக்களை வைத்துக்கொண்டு நாங்கள் செயற்படப்போவதில்லை.

ஆனால் அதிகார பரவலாக்கல்தான் இங்கே முக்கிய விடயமாக அமையவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலுமொரு ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி அமைக்க இருப்பதாக தெரியவருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் விசாரணை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதில் பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக நாங்கள் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்தோம். ஆனால் தாக்குதல் காலப்பகுதியில் உதிர்த்த நாமல் குமார போன்ற இளைஞர்கள் தற்போது எங்கே என தெரியாது. அதேபோன்று திகன ககலவரத்துக்கு காரணமாக இருந்த அமித் வீரசிங்க, இவர்கள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை.

எனவே ஜனாதிபதி அமைக்கும் ஆணைக்குழுவில் இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடை ஏற்க முடியாது – ஹக்கீம்

மக்கள் அன்றாடம் வாழமுடியாத நிலையில் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு மொத்த வரவு செலவு திட்டத்தில் 10வீதம் ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் கொள்கை அடிப்படையில் புதிய சீர்திருத்தங்களை மேற்காெள்ள ஜனாதிபதி எடுத்து வரும் முயற்சியை பாராட்டுகின்றோம்.

ஆனால் மக்கள் பாரிய வறுமை கோட்டின் கீழ் இருக்கும் நிலையில் மக்களுக்கு மானியங்கள் எதுவும் இல்லாத நிலையில் பாதுகாப்பு பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக வரவு செலவு திட்டத்தின் மொத்த தொகையில் 10வீதத்தை பாதுகாக்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்தளவு நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்குவதற்கு பாரிய அச்சறுத்தல்கள் எதுவும் இல்லை.

அத்துடன் இந்தியாகூட பாதுகாப்புக்கு வரவு செலவு திட்டத்தில் 9வீதமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் சிந்தித்திருக்கலாம் என்றார்.