எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு காசோலைகள் எழுதப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இவ்வாறு உரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, அவர் பல வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார். இது போன்ற மசோதாவில் யார் வேண்டுமானாலும் திருத்தங்கள் கொண்டு வரலாம். நீங்கள் அதை கொண்டு வர விரும்பினால், நீங்கள் கொண்டு வாருங்கள். அதற்கு உதவலாமா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்வோம். உங்கள் தந்தையின் காலத்தில் திறைசேரியில் இருந்து புலிகளுக்கு காசோலைகள் எழுதப்பட்டன. திருமதி சந்திரிகாவின் காலத்தில் அதுபற்றி ஒரு ஆணைக்குழுவை நியமித்து தகவல்களைக் கண்டறிந்தார்கள். அந்த உண்மைகளை அது உறுதிப்படுத்தியது. இன்று உங்களுக்கு புலிகளால் பணம் கொடுக்கப்படுகிறது என்ற கருத்து மக்களிடம் உள்ளது. நான் அதை உண்மை என்று சொல்லவில்லை. மக்கள் சொல்வதை நான் சொல்கிறேன். இப்படி ஒரு மசோதா கொண்டு வருவது நல்லது. நீங்கள் திருத்தம் கொண்டு வாருங்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் கூட்டாளிகளுக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. முசோலினிக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கும் பணம் வழங்கப்பட்டது. வேறு எதனாலும் அல்ல. எதிரி அணியில் பிளவுகளை உருவாக்க. எனது தந்தையின் காலத்தில் பிரபாகரனிடம் இருந்து விலகியிருந்த மாத்தயாவையும் யோகியையும் வலுப்படுத்த விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த பல்வேறு உத்திகளை செயற்படுத்தினார்கள்.
ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – நீங்கள் வாலை மிதிக்காதீர்கள். அதாவது உங்களுக்கு பணம் எப்படி வருகிறது என்பது பற்றி மக்கள் சொல்லும் கதைகள். அப்படி ஒரு மசோதா கொண்டு வருவது உங்களுக்கு நல்லது.