யாழ்ப்பாணம்- காரைக்கால் இடையிலான கப்பல் சேவைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் வழித்தடத்தை மாற்றி புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம், திருகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா, வணிகத் தொடர்பு மேம்படும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (4) முதல்வர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அச்சந்திப்பின் போது பல முக்கிய விஷயங்களை உரையாடினர். அச்சந்திப்பில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது அவர் முதல்வர் ரங்கசாமிக்கு அளித்த கடிதத்தில், “இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தங்களின் சார்பில் ஏராளமான உதவிகளை செய்துள்ளீர்கள். குறிப்பாக இலங்கை பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் புதுச்சேரியில் இருந்து மருந்துகளை அனுப்பியது பெரும் உதவியாக இருந்தது.
காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வரையிலான கப்பல் சேவை முயற்சிகளுக்கு நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த வழித்தடத்தை மாற்றி புதுச்சேரி-காங்கேசன் துறை மற்றும் திருகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க அனுமதி வழங்கும் நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா மற்றும் வணிகத் தொடர்பு மேம்படும்.
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கோணேஸ்வரம் கோயில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் மற்றும் நயனாதீவு, கதிர்காமம் முருகன் கோயில், நுவரேலியாவில் உள்ள சீதை கோயில், ரம்பொடவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு தரிசனங்களை மேற்கொள்ள இலங்கைக்கு முதல்வர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.