மண்டாஸ் புயல் தாக்கம் வட, கிழக்குக்கு பாதிப்பு

ஒருவர் உயிரிழப்பு-  2,143 பேர் பாதிப்பு – 275 மாடுகள் பலி – 510 வீடுகள் சேதம்

மண்டாஸ் புயல் நேரடியாக தாக்காத போதிலும் தொடர்ச்சியான மழை, கடும் குளிர், வேகமான காற்றால் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. கிழக்கு மாகாணத்தில் ஒருவர் உயிரிழந்தார். 245 குடும்பங்களை சேர்ந்த 883 பேரும், 484 குடும்பங்களை சேர்ந்த 1,659 பேருமாக 729 குடும்பங்களை சேர்ந்த 2143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வடக்கு கிழக்கில் 275இற்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. வங்கக்கடலில் மையம் கொண்ட தாழமுக்கம் மண்டாஸ் புயலாக மாற்றம் கொண்டது.

இது வடக்கு – வடமேற்காக நகர்ந்தது. தமிழகக் கரையை புயலாக இது நள்ளிரவை தாண்டி கடந்தது. இந்த புயலின் நகர்வின் தாக்கத்தால் நேற்று முன்தினம் இரவு வடக்கு – கிழக்கில் அதிக மழைவீழ்ச்சி பதிவானது. அத்துடன், மிகக் குளிரான காலநிலையும் நீடிக்கிறது. மேலும், வேகமான காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல மரங்கள் வீடுகளின்மீது வீழ்ந்ததில் அவை சேதமடைந்தன.

வடக்கில் 1,659 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் 112 குடும்பங்களை சேர்ந்த 407 பேரும் முல்லைத்தீவில் 141 குடும்பங்களை சேர்ந்த 454 பேரும், வவுனியாவில் 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேரும், கிளிநொச்சியில் 172 குடும்பங்களை சேர்ந்த 585 பேரும், மன்னாரில் 50 குடும்பங்களை சேர்ந்த 184 பேருமாக 484 குடும்பங்களை சேர்ந்த 1,659 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேசமயம், யாழ்ப்பாணத்தில் ஒரு வீடு முழுமையாகவும் – 76 வீடுகளும், முல்லைத்தீவில் 141 வீடுகளும், வவுனியாவில் 7 வீடுகளும், கிளிநொச்சியில் 34 வீடுகளும், மன்னாரில் முழுமையாக ஒரு வீடும் பகுதியளவில் 11 வீடுகளுமாக வடக்கு மாகாணத்தில் 2 வீடுகள் முமுமையாகவும் 269 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கிழக்கில் ஒருவர் பலி!

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான மழை மற்றும் கடும் குளிரான காலநிலையால் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வெல்லாவெளியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 குடும்பங்களை சேர்ந்த 173 பேரும், திருகோணமலையில் 71 குடும்பங்களை சேர்ந்த 251 பேரும், அம்பாறையில் 130 குடும்பங்களை சேர்ந்த 459 பேருமாக கிழக்கு மாகா ணத்தில் 245 குடும்பங்களை சேர்ந்த 883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் 44 வீடுகளும், திருகோணமலையில் 68 வீடுகளும், அம்பாறையில் 129 வீடுகளுமாக கிழக்கு மாகாணத்தில் 241 வீடுகள் சேதமடைந்துள்ளன.

275 மாடுகள் பலி!

கிளிநொச்சி, முல்லைத்தீவு, திரு கோணமலை மாவட்டங்களில் 275இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் 165 மாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 மாடுகளும், திருகோணமலையில் 50 மாடுகளும் உயிரிழந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.