எட்கா உடன்படிக்கை தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் இம்மாத இறுதியில் பேச்சு

இந்தியாவுடனான நிறுத்தப்பட்ட ‘எட்கா’ ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளை இந்த மாத இறுதியில் இலங்கை ஆரம்பிக்கவுள்ளது என்று சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரதான பேச்சாளர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

“நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு வர்த்தக உடன் படிக்கைகள், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதற்காக தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமான – எட்காவை செயல்படுத்த இலங்கை விரும்புகிறது. இது தொடர்பான பேச்சை இந்த மாத இறுதியில் தொடங்குவோம். இந்தியா – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் இருந்து நடைமுறையிலுள்ள (ஐ. எஸ். எவ். ரி. ஏ.) உடன்படிக்கை விரிவுபடுத்தும் நோக்கில் கடந்த 2016 – 2019 காலப்பகுதியில் நாம் 11 சுற்று பேச்சுகளை முடித்துள்ளோம்”, என்றும் அவர் கூறினார்.

“இறக்குமதியை பொறுத்தவரை இலங்கை சீனா, இந்தியாவை நம்பியுள்ளது. 2021ஆம் ஆண்டு இந்தியாவிடமிருந்து 474 கோடி டொலர்கள் பெறுமதியான பொருட்கள் – சேவைகளை இறக்குமதி செய்துள்ளது. ஆனால், 98 கோடி டொலர்கள் பெறுமதியான பொருட்கள் – சேவைகளை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. எனவே, இதில் காணப்படும் சமச்சீரற்ற தன்மை தொடர்பில் எட்கா உடன்படிக்கை தொடர்பாக இலங்கை பேச விரும்புகிறது. இதற்காக இந்தியாவுக்கான ஏற்றுமதி ஒதுக்கீட்டை தளர்த்த பேச்சு நடத்த இலங்கை விரும்புகிறது – என்றும் தெரிவிக்கப்பட்டது.