உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்க்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதையடுத்து, உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடார்பான யோசனை நாடாளுமன்ற நிதிக்குழுவில் சமர்பிக்கப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அத்தோடு வார இறுதி விடுமுறை நாளில் நடத்தப்படவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் முன்மொழிவுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிராக வாக்களிக்க உள்ளதென பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.