மலையக மக்களின் உரிமைகளில் எமக்கு தீவிர கரிசனையுண்டு – யாழ். பேரணியில் நிரோஷ்

லையக தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் வடக்கு, கிழக்கு மக்களிடத்தில் கரிசனை மேலும் அதிகரித்துள்ளதையே இப்பேரணிக்கு உணர்த்துவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் யாழ். மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மாண்புமிகு மலையக மக்கள் எழுச்சிப் பயணத்தின் யாழ்ப்பாண பேரணி இன்று வியாழக்கிழமை (03) யாழ் நகரில் நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மலையக மக்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக நின்று உழைத்துள்ளனர். ஆனால், இந்நாட்டில் அதிகம் அரசியல், சமூக, பொருளாதார கலாசார உரிமைகள் விடயத்தில் மறுக்கப்படும் ஒரு தரப்பாக அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குடியிருப்பதற்கு ஒரு துண்டு நிலத்துக்காக போராடுகின்றனர். ஒரு துண்டு நிலத்தினை பகிர்ந்தளிப்பதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த தரப்புக்கள் ஏமாற்றியே வருகின்றன. அதுபோல் அவர்களுடைய ஊதியம் தொடர்பான பிரச்சினை தொடர் ஏமாற்றத்துக்குரிய ஒன்றாக உள்ளது.

உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் குறைந்தபட்ச பொதுநலப் பண்டங்களை பெற்றுக்கொள்வதற்குக் கூட ஏங்கவேண்டியுள்ளது; போராட வேண்டியுள்ளது.

பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களது உரிமைகள் நிலைநிறுத்தப்படாமல் உழைக்கும் மக்களது பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், தொழில் பாதுகாப்பு என அத்தனையும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையிலேயே மலையக மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பதையிட்டு நாடே வெட்கித் தலைகுனிய வேண்டும்.

பத்து அடி லயன் அறைகளில் குடும்பமாக வாழ முடியாமல் இன்றும் திண்டாடுகின்றனர். சாதாரணமாக, தோட்டங்களில் தாய்மார் பிரசவத்துக்குச் செல்வதற்கே கிராமத்தில் வீதிகள் இல்லை. உண்மையில் மலையக மக்கள் மீது பிரயோகிக்கப்படும் சுரண்டல்கள் போன்று பொருளாதாரச் சுரண்டல் நிலைமையினை இலங்கையில் வேறு எந்தச் சமூகங்களும் எதிர்கொள்ளவில்லை என்ற கசப்பான உண்மையை வெளிப்படையாக சொல்ல வேண்டும். நாங்கள் அவர்களது துன்ப துயரங்களை நேரில் பார்க்கின்றோம்.

இந்நிலையில், மலையக மக்கள் தொடர்பாக விட்டுக்கொடுப்பின்றி செயற்படவேண்டிய பொறுப்பு வடக்கு, கிழக்கில் எமக்குள்ளது.

மலையக பெண்பிள்ளைகள் கொழும்பு மற்றும் நாட்டின் பிற பாகங்களுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகவும், இளைஞர்கள் பலர் கடைகளுக்கு வேலைக்குச் செல்பவர்களாகவும் உள்ளனர்.

மலையகத்தில் இவ்வாறாக ஒடுக்குமுறை நிலவுகிறபோதும், அதையும் மீறி பல்துறைகளிலும் இளைய தலைமுறையொன்று முன்னேற்றம் கண்டு வருகிறது. இப்பெருமையினையும் நாம் கொண்டாடுகின்றோம் என்றார்.