முதலாவது அரசியல் படுகொலை துரையப்பா; அதை தூண்டியது அமிர்தலிங்கம்: ஜனா எம்.பி

அல்பிரட் துரையப்பாவே முதலாவது அரசியல் படுகொலையாகும். அவரை சுட்டுக்கொன்றது பிரபாகரன். அதனை தூண்டியது அமிர்தலிங்கம். யாழ்ப்பாணத்தில் மேடையில் ஒருமுறை அமிர்தலிங்கம் சொன்னார், துரையப்பாவிற்கு இயற்கை மரணம் நிகழாது என்றார். அதை தொடர்ந்து அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார்.

அல்பிரட் துரையப்பா முதலாவது அரசியல் படுகொலை. பிரபாகரன் கடைசி அரசியல் படுகொலையென்பது துரதிஸ்டமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தல் 22 ஆம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஈரா. துரைரெட்ணம் தலைமையில் தியாகிகளை நினைவுகூருவோம் நினைவேந்தலில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையில் இந்த தியாகிகளை நினைவு கூற வரும் போது எனது மனதை உறுத்தும் ஒரு செய்தி – நாங்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் எமது இனம் 1983 காலத்துக்கு முன்னர் இருந்த காலத்துக்கு இன்று சென்றிருக்காது, இன்று எங்களை நாங்கள் ஆளும் தனிநாட்டில் இருந்திருப்போம்.

இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடிமைகளாக இரண்டாம் தர ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்ததன் பிரகாரம் அந்த உரிமைக்காக அகிமிம்சை போராட்டத்தில் ஆரம்பித்து ஆயுத போராட்டத்திற்கு நாங்கள் வலிந்து தள்ளப்பட்டு 2009 மே 18 அந்த ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.

ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிதவாத கட்சியான ஒரு கட்சி மக்களின் உரிமைக்காக போராடியது அந்த அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போரட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் படித்துக் கொண்டவர்கள் இணைந்தனர் அதில் ஒருவர் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா. அவருடன் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த நாட்டிலே 1983 இல் இடம்பெற்ற மிக மேசமான இன அழிப்புக்கு பின்னர் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது, பல போராட்ட இயக்கங்கள் விடுதலை வேண்டிய ஆயுதம் ஏந்தி போராடினாலும் முன்னனியில் 5 இயக்கங்கள் போராடின.

அதில் 3 இயக்கங்கள் தேசிய முன்னணியாக ஒற்றுமையாக செயற்பட 1984 அடி எடுத்து வைத்த பின்னர் 1985 விடுதலை புலிகளும் முன்னணியில் இனைந்தனர்.

1983 இல் இருந்து 87 வரை உலகதமிழர் இடையே பேசும் பொருளாக இருக்கும் 13 ஆவது திருத்த சட்டம் அதன் ஊடாக வந்த மாகாண முறைமை சட்டம் ஏற்படுத்தப்பட்டு இந்த 83 இற்கும் 87 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதில் ஒரோ ஒரு போராட்ட தலைவர் தமிழ் ஈழு விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் 1986 மே 6 ஆம் திகதி கொல்லப்பட்டதுடன் 1987 ஆம் யூலை 29 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாணசபை முறைமை வந்தது.

அந்த மாகாண சபையை நடாத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது அதனை ஏற்றுக் கொண்டனர்.

அந்த இடைக்கால நிர்வாக சபைக்கு 11 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது அதில் 7 பேரை புலிகள் நியமித்தனர் ஏனைய 4 பேர் இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் அதன் தலைமைத்துவம் யாருடன் செல்லவேண்டும் என்பதால் அது நிறைவேறாது சென்றது 1988 இறுதியல் மாகானசபை தேர்தல் அதில் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் மாகாணசபை முறையை ஏற்குமாறு கேட்ட போது அதனை அவர் மறுத்தார். அவ்வாறே அதனை ரெலோவும் எற்கவில்லை இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா எதிர்கால சிந்தனையுடன் இதனை ஏற்று கொண்டதையடுத்து இணைந்த வடகிழக்கு மாகாணசபை உருவாகியது.

விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த காலகட்டத்தில் அண்ணன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மட்டக்களப்பில் நா. உறுப்பினராக இருந்த சாம்தம்பிமுத்து அவரது மனைவி உட்பட தமிழ் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.

அன்று 13 திருத்த சட்டத்தை ஏற்று இருந்தால் இன்று அது பேசும் பொருளாக இருந்திருக்காது. இந்த 1987 மாகாணசபை மு​றைமை வந்தது தொடக்கம் 2009 மே 18 வரை ஜே. ஆர் ஜெயவத்தனாவின் கையை முறுக்கி பலாத்காரமாக அந்த ஓப்பந்தத்தில் கையொழுத்து இட வைத்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட இந்த நாட்டிலே எத்தனை தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்.

வடக்கு கிழக்கிலே முதலாவது அரசியல் படுகொலை முன்னாள் யாழ். நகர மேஜர் அல்பிரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அதை தூண்டியது அண்ணன் அமிர்தலிங்கம் அவர் யாழில் மேடை ஒன்றில் பேசும் போது அல்பிரட் துரையப்பாவிற்கு இயற்கை மரணம் கிடையாது என பேசியிருந்தார் அதை தொடர்ந்து தான் அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார்.

அல்பிரட் துரையப்பா முதலாவது அரசியல் படுகொலை. ஆனால் நாட்டிலே இறுதியான அரசியல் படுகொலை 2009 மே 18 பிரபாகரன் என்பது துரதிஸ்டம்.

13 வது திருத்த சட்டத்தை முழுமையாக அழுல்படுத்துமாறு கேட்கின்றோம். ஆனால் இறுதி தீர்வு மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் 13 இல் உள்ளடக்கப்படவில்லை. அது மேலும் செல்ல வேண்டும். எங்களை நாங்களே எமது பிரதேசத்தில் ஆளக்கூடிய சுயநிர்ணய உரிமை வேண்டும். அதுதான் இறுதி இலக்கு. அதற்காகத்தான் அகிம்சை ரீதியில் போராடினோம். அது கிடைக்காததால் ஆயுதரீதியில் தனிநாட்டுக்காக போராடினோம். இன்று 13உம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

இந்திய பிரதமர் நரோந்திர மோடியை சந்தித்த ஜனாதிபதி ரணிலுக்கு நல்ல குளுசை கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்க வேண்டிய கடமையம் தேவையும் இந்திய அரசுக்கு இருக்கின்றது. காரணம் இந்த ஆயுத போராட்டத்திற்கு தார்மீக ஆதரவும் அனுசரனையும் பயிற்சிகளையும் தந்தது இந்திய அரசாங்கம்.

அதேபோன்று 2009 ஆயுத போராட்டத்தை மௌனிக்க வைப்பதற்கு இந்திய அரசு முக்கிய காரணம். இலங்கை இந்திய சர்வதேச ஓப்பந்தத்தில் இந்தியா கையொழுத்து இட்டுள்ளது. அவர்களை நம்பிதான் நாங்கள் எல்லாம் ஆயுதங்களை ஒப்படைத்து இந்த நாட்டிலே அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளோம். எனவே இந்தியாவுக்கு கடமை இருக்கின்றது.

அவர்கள் ரணிலுக்கு நல்ல ஆலோசனை கூறியுள்ளார்கள் என நினைக்கிறேன். கடந்த புதன்கிழமை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ரணில் சந்தித்தபோது, 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துகிறேன், ஆனால் பொலிஸ் அதிகாரத்தை தரமாட்டேன் என்றார். நாம் அதை நிராகரித்தோம்.

பொலிஸ் அதிகாரத்தை தர மாட்டேன் என சொல்ல ரணிலுக்கு மாத்திரமல்ல, யாருக்கும் கிடையாது. ஏனெனில், இலங்கை அரசியலமைப்பில் அது உள்ளது. அரசியலமைப்பை மீற அவருக்கும் அதிகாரமில்லை.

ஜனாதிபதி 26ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அவசர சந்திப்பின் அர்த்தத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனெனில், கடந்த காலங்களில் இலங்கை அரசு வடகிழக்கல் மாத்திரமல்ல தெற்கில் 1971 ஆம் ஆண்டும் 1988 இரண்டு தடவை ஜே.வி.பி ஆயுத கிளர்ச்சியை சந்தித்தது. அந்த கிளர்ச்சியை அடக்குவதற்கு இந்தியா உதவிகரம் நீட்டியதுடன் வடகிழக்கில் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவிகரம் கொடுத்தது மாத்திரமல்ல தற்போதைய பொருளாதார ரீதியாக அதள பாதாளத்துக்கு தள்ளப்பட்ட போது முதல் முதலாக உதவிகரம் நீட்டியது.

சர்வதேச நாணய நிதியம் கூட இன்று 2.9 பில்லியன் கடன்களை நீண்டகால சலுகையில் கொடுக்க இருக்கின்றது. ஆனால் இந்தியா ஒரு வருடத்துக்குள் 4 பில்லியன் டொலர்களை வழங்கியிருக்கின்றது. அப்படிச் செய்த நாடு இந்தியா.

வடகிழக்கு தமிழர்களின் உரிமைகளை கொடுக்க வேண்டும் அவர்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என ஜனாதிபதி ரணில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து பல இனவாதிகளை கண்டிருக்கின்றோம் சிறில் மத்தியூஸ், ஆர்.எம்.பி. ராஜரட்ண, ஆர்.எம். சேனநாயக்கா போன்றவர்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு ஆளுக்குள் செலுத்தியதை போன்று இன்று சரத்வீரசேகர என்பவர் ஒரு இனவாதியாக தமிழின துரோகியாக கருத்துக்களை கூறிவருகின்றார்.

எனவே நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே கருத்தை கூற விட்டால் அந்த ஒற்றுமையின் பலவீனத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்ளவர்கள் அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டாம் என்றார்.