முள்ளிவாய்க்கால் பேரழிவை தடுத்திருந்தால் பூகோள அரசியல் போட்டி கூர்மை அடைந்திருக்காது – சபா குகதாஸ்

முள்ளிவாய்க்கால் பேரழிவை தடுத்திருந்தால் பூகோள அரசியல் போட்டி கூர்மை அடைந்திருக்காது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பொறுப்பாளரும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பூகோள அரசியல் அதிகாரப் போட்டியினால் இலங்கை எதிர்காலத்தில் போர்க்களமாக மாறும் அபாயம் உள்ளதாக ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமான First Post ற்கு செவ்வி வழங்கியுள்ளார்.

இலங்கைத்தீவில் சிங்கள பேரினவாத ஆட்சியாளரின் அதிகார பதவி வெறியும் ஊழலும் நாட்டை வங்குறோத்து நிலைமைக்கு மாற்றியது மாத்திரமல்ல பூகோள நாடுகளின் அரசியல் சதுரங்கமாகவும் மாறியுள்ளது நாடு பற்றியதும் அதன் நிலையான அபிவிருத்தி பற்றியதும் நிலையான கொள்கைகளை வகுக்காமல் ஆட்சிக்கு வந்ததும் தமக்கான அதிகாரங்களை அளவுக்கு அதிகமாக பெற்று அதிகார துஸ்பிரையோகங்களை செய்து அவற்றில் இருந்து தப்பிக் கொள்ள தமக்கு விரும்பிய வெளிநாடுகளுக்கு நாட்டின் முதன்மையான பகுதிகளை விற்று மறைமுக காலணித்துவத்தை வலுப் பெறச் செய்து விட்டு பொறுப்பற்ற வகையில் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்து வேதாந்தம் ஓதுகின்றனர் இதற்கு தற்போதைய ஐனாதிபதியும் விதிவிலக்கல்ல.

2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சிங்கள ஆட்சியாளர்கள் குறிப்பாக ராஐபக்சக்களும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தடுத்து நிறுத்தியிருந்தால் பூகோள நலன் சார்பு நாடுகளின் அரசியல் அதிகாரப் போட்டி இன்று இலங்கைத் தீவில் தீவிரம் பெற்றிருக்காது ஆனால் தற்போதைய தீவிரப் போக்கு கூர்மை அடையுமாக இருந்தால் ஐனாதிபதி கூறும் அபாயம் தென்னிலங்கையில் தான் மையங் கொள்ள இருக்கிறது.

2009 இற்கு முன்னர் இந்தியாவின் தென்கடல் பிராந்தியம் மிக பாதுகாப்பாக இருந்தது காரணம் இலங்கையின் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் பலமான கடற்படைக் கட்டுமானத்தை விடுதலைப் புலிகள் வைத்திருந்தமை அத்துடன் பூகோள நாடுகளின் அதிகாரப் போட்டியும் கூர்மையடையாது வரையறுக்கப்பட்டதாக இருந்திருக்கும் இவையாவும் தலைகீழாக மாறுவதற்கு முள்ளிவாய்க்கால் பேரவலமும் விடுதலைப் புலிகளின் மௌனிப்பும் காரணமானாது.

தற்போது பிராந்திய அரசியல் அதிகாரப் போட்டியும் பூகோள நாடுகளின் ஆதிக்கமும் அதிகரித்தமைக்கு மிகப் பிரதான காரணம் ஈழத் தமிழர்களின் அரசியல் அதிகாரப் பிரச்சனை தான் எனவே சிறிலங்கா ஆட்சியாளர் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் தென்னிலங்கைக்கான அபாயத்தை நிறுத்த இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதே உசிதம் ஆனால் அவ்வாறான மாற்றம் சிங்கள ஆட்சியாளர் இடையே ஏற்பட்டால் அதிசயமாகவே இருக்கும்.

இலங்கைத் தீவில் மையம் கொண்டுள்ள பிராந்திய மற்றும் பூகோள நாடுகள் தங்களின் நலன்களை முன்னுரிமைப் படுத்தி சிங்கள ஆட்சியாளரை முழுமையாக கையாளவே முயற்சிக்கின்றனர் அதுவே ஆட்சி மாற்றங்களுக்கும் ஸ்திரம் அற்ற ஆட்சிக்கும் வழி வகுக்கின்றது.

தமிழர் தரப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான பேரப்பலம் விடுதலைப் புலிகளிடம் மாத்திர இருந்தது துரதிஸ்ட வசமாக தனி நாட்டுக் கோரிக்கையில் ஒரு படி இறங்கி சமஸ்டி தீர்வை பெற்றுவதற்கு பச்சைக் கொடியை காட்ட தாமதித்தமையால் மௌனிப்புக்கு வழி வகுத்தது அன்று சமஸ்டி தீர்வை பெற்றிருந்தால் இன்று தனி நாட்டிற்கான பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கலாம்.

தற்போது தமிழர் தரப்பில் மிதவாத தலைமைகளும் ஏனைய தரப்புக்களும் சிங்கள ஆட்சியாளர்களையும் பூகோள அரசியல் அதிகாரத் தரப்புக்களையும் கையாள முடியாத இராஐதந்திரம் அற்ற வெற்று வேட்டுகளாகவே உள்ளனர்.

உண்மையில் இலங்கை மீது மையம் கொண்டுள்ள பூகோள அதிகாரப் போட்டிக்கு சிங்கள ஆட்சியாளர் தான் காரணம் என்றால் இந்தப் போட்டிக்குள் தமிழர்களுக்கான அதிகாரங்களை பெறுவதற்கான சாதக நிலமைகள் இருக்கின்ற போதும் அந்த பூகோள அரசியலை தமிழர் தரப்பு கையாளவில்லை.