யாழ் மாவட்டத்தில் 402 உள்ளூராட்சி உறுப்பினர்களை தெரிவு செய்ய 4111 வேட்பாளர்கள்

யாழ். நிர்வாக மாவட்டத்தில் 17 உள் ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 4111 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- யாழ். நிர்வாக மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை போட்டியிடும் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்த முறை தேர்தலில் யாழ்.மாவட் டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேச் சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 13 அரசியல் கட்சிகள் சார்பில் 135 வேட்புமனுக்களும் 15 சுயேச்சைக் குழுக் கள் சார்பில் 15 வேட்புமனுக்களுமாக 150 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு தேர்தலுக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.

இந்த முறை தேர்தலில் வாக்களிப் பதற்கென யாழ்.மாவட்டத்தில் 4 லட் சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். அவர்கள் வாக்களிப்பதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் யாழ்.மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முறை உள்ளூராட்சி மன்ற சட்டத்திற்கிணங்க அந்தந்த வட்டாரங்களிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளோம்.

அந்த வகையில் 243 வாக்கு எண்ணும் நிலையங்கள் யாழ். மாவட்டம் முழுவதும் அமைக்கப்படவுள்ளன. அந்த 243 வாக்களிப்பு நிலையங் களில் வாக்குகள் எண்ணப்பட்டு வட்டார தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் மாவட்ட ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் வட்டார அடிப்படையில் 243 உறுப்பினர்களும் கட்சிகள் பெற்றுக்கொள்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிந்து அனுப்பப்பட வேண்டிய 159 வேட்பாளர்களு மாக 402 உறுப்பினர்கள் 17 சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளனர்.

இந்த 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக யாழ். மாவட்டத்தில் 4111 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 13 கட்சிகள் சார்பில் 3686 வேட்பாளர்களும் 15 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 425 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.

இதன் அடிப்படையில் மொத்த வாக்காளர் தொகையிலேயே 0.85 வீதமான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.