யாழ் மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒருங்கமைப்பில் யாழில் நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை (ஒக் 31) நடைபெறுகிறது.

இந்த நடமாடும் சேவையானது யாழ். மாவட்ட செயலகத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையில் இடம்பெறுகிறது. இதனை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்துள்ளார்.

இச்சேவையில் நீதி அமைச்சர், நீதி அமைச்சரின் செயலாளர் வசந்த பெரேரா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் சமுர்த்தியசிங்க, யாழ் மாவட்ட செயலர் க.மகேசன், மேலதிக செயலாளர் ம.பிரதீபன், காணி மேலதிக செயலாளர் செ.முரளிதரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய அமைச்சுக்களின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நடமாடும் சேவையில் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித்தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து, உயிரிழப்பு, காயத்துக்கான நட்டஈடினை பெற்றுக்கொள்ளல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகளை மேற்கொள்ள முடியும்.

குறித்த நடமாடும் சேவை நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்குபற்றியுள்ளன.

குறித்த நடமாடும் சேவையானது நாளை செவ்வாய்க்கிழமை (நவ 1) கிளிநொச்சி திறன் விருத்தி மத்திய நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவை சேர்ந்தவர்களும், கிளிநொச்சியில் நாளை நடைபெறவுள்ள நடமாடும் சேவையில் தமது மேற்படி தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.