2023 இற்கு முன்னர் காணாமல்போனோர் விசாரணைகள் நிறைவடையும் – நீதியமைச்சர்

அடுத்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிக்கப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் நேற்று நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது, அவர் இதனை தெரவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையும், சட்ட முறைமையை புதுப்பிப்பதற்கு பல புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையும் தூதுவர் பாராட்டினார்.

இலங்கையில் ஊழலைத் தடுப்பதற்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அமெரிக்க தூதுவர் பாராட்டினார். இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன், இலங்கையில் புதிய அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காகவும், இது தொடர்பில் அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காகவும் அமைச்சருக்கு தூதுவர் தனது நன்றியை தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் சேவைகள் உள்ளிட்ட நலன்புரி திட்டங்களுக்கும் தூதுவர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதன்போது காணாமல் போனவர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிக்கப்படும் என்று நீதியமைச்சர் அமைச்சர், அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒருங்கமைப்பில் யாழில் நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை (ஒக் 31) நடைபெறுகிறது.

இந்த நடமாடும் சேவையானது யாழ். மாவட்ட செயலகத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையில் இடம்பெறுகிறது. இதனை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்துள்ளார்.

இச்சேவையில் நீதி அமைச்சர், நீதி அமைச்சரின் செயலாளர் வசந்த பெரேரா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் சமுர்த்தியசிங்க, யாழ் மாவட்ட செயலர் க.மகேசன், மேலதிக செயலாளர் ம.பிரதீபன், காணி மேலதிக செயலாளர் செ.முரளிதரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய அமைச்சுக்களின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நடமாடும் சேவையில் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித்தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து, உயிரிழப்பு, காயத்துக்கான நட்டஈடினை பெற்றுக்கொள்ளல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகளை மேற்கொள்ள முடியும்.

குறித்த நடமாடும் சேவை நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்குபற்றியுள்ளன.

குறித்த நடமாடும் சேவையானது நாளை செவ்வாய்க்கிழமை (நவ 1) கிளிநொச்சி திறன் விருத்தி மத்திய நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவை சேர்ந்தவர்களும், கிளிநொச்சியில் நாளை நடைபெறவுள்ள நடமாடும் சேவையில் தமது மேற்படி தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளுக்கும் நீதி அமைச்சருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இச் சந்திப்பில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசிகள் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 34 பேரையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச,

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டையே பின்பற்றி வருகிறோம்.

அண்மையில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலையில் உள்ளவர்களின் வழக்கு நிலைமைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.