யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆராயப்பட்டது. விமான நிலையத்தை வடக்கு பக்கமாக விரிவாக்கம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
பெரியளவிலான விமானங்கள் வந்து இறங்க வசதியாகவே இந்த விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன், தற்போது சேவையில் அதிக ஆசனங்கள் கொண்ட விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவும், யாழ்ப்பாண மக்கள் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்வது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டன. இதேநேரம், மக்களின் காணிகளை மேலும் சுவீகரிக்காமல் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணத்திற்கான விமான நிலைய உயர் அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றனர்.