யாழ்ப்பாணம் – மதுரை இடையே விரைவில் விமான சேவை – நிமல் சிறிபால டி சில்வா

யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவுக்குமி டையில் தற்போது நான்கு தினங்கள் இடம் பெறும் விமான சேவைகளை வாரத்தின் ஏழு நாட்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான சேவைகள் மற்றும்  துறைமுக அபிவிருத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற அண்மையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்கு விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை மூலம் பெரும் பங்களிப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வடக்கில் காங்கேசன்துறை துறைமுகத்தில் அரசாங்கத்தின் செலவில் 450 மில்லியன் ரூபா செலவில் முனையத்திற்கான கட்டிட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

காங்கேசன்துறைக்கான முதலாவது கப்பல் அண்மையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தது. இந்தியாவின் சுற்றுலாப் பயணிகள் சுமார் 500 பேருக்கு அதிகமானோர் அதில் வருகை தந்திருந்தனர்.

இந்த கப்பல் சேவையை வாரத்திற்கு ஒரு முறை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கிணங்க பலாலி விமான நிலையத்தை நாம் நிர்மாணித்து வழங்கியுள்ளோம்.

வாரத்திற்கு நான்கு தினங்கள் விமான சேவைகள் இடம் பெறுகின்றன. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை விமானப்பயணச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த விமான சேவையை 7 நாட்களுக்கும் தொடர்வதற்கு நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

வேறு விமான சேவை நிறுவனங்களும் விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதற்கு அனுமதி வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம்.

சென்னைக்கும் பலாலிக்குமிடையில் அந்த விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரிய விமானங்களை அங்கு தரையிறக்கும் வகையில் விமான ஓடுபாதைகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வுள்ளன.

அது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்டவர்களுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்க அரசாங்கம் தீர்மானம்

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

யாழ். விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ஆராய்வு

யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆராயப்பட்டது. விமான நிலையத்தை வடக்கு பக்கமாக விரிவாக்கம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பெரியளவிலான விமானங்கள் வந்து இறங்க வசதியாகவே இந்த விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன், தற்போது சேவையில் அதிக ஆசனங்கள் கொண்ட விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவும், யாழ்ப்பாண மக்கள் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்வது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டன. இதேநேரம், மக்களின் காணிகளை மேலும் சுவீகரிக்காமல் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணத்திற்கான விமான நிலைய உயர் அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றனர்.

யாழ் – இரத்மலானை விமான சேவையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வு

இந்தியாவின் விமான சேவை நிறுவனமான அலையன்ஸ் ஏர் இந்தியாவுடன் இணைந்து யாழ்ப்பாணம்மற்றும் இரத்மலானை விமான நிலைய செயற்பாடுகளை அதிகரிப்பது தொடர்பான அலையன்ஸ் விமான அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்திற்கும் இரத்மலானைக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இதன்போது ஆரயப்பட்டன.

அலையன்ஸ் ஏர் இந்தியா குழு இந்த திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்ததுடன் மேலும் விமான நிறுவனம் பரிந்துரைகளை பரிசீலிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து வாரத்தின் 7 நாட்களும் விமான சேவைகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த கடன் உதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.

பலாலி விமான நிலையத்தில் தீர்வையற்ற (Dutyfree) கடை திறந்து வைப்பு

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (11) தீர்வையற்ற கடை (Dutyfree) திறந்து வைக்கப்பட்டது.

தீர்வையற்ற கடையினை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ பயணி ஒருவருடன் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் வடபிராந்திய சுங்கத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

விரைவில் சென்னை- பலாலி இடையிலான விமான சேவை அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ தெரிவித்தார்.

யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தில் தீர்வைற்ற கடையினை திறந்து வைத்தமையையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

பலாலி விமானத்தின்ஊடாக பயணிக்கும் பயணிகளுக்காக மேலும் பல வசதிகளை ஏற்படுத்த உள்ளோம். தற்போது நான்கு விமான சேவைகள் மாத்திரமே வாரத்தில் இடம்பெறுகின்றன எதிர்வரும் காலங்களில் ஏழு விமான சேவைகள் ஒரு வாரத்தில் இடம் பெறுவதற்குரியவாறு எயாலைன்ஸ் நிறுவனத்தினருக்கு அறிவுறித்தியுள்ளோம்.

அதேபோல இரத்மனாலை பலாலிக்கிடையிலான உள்ளூர் விமான சேவையினையும் விரைவில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளோம் .

அத்தோடு பலாலி விமான நிலையத்தினை விஸ்திரித்து இங்கே பயணிக்கும் பயணிகளுக்கும் மேலும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிகளை எடுத்துள்ளோம்.

வர்த்தக ரீதியில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இன்று முதலாவது தீர்வையற்ற கடை திறக்கப்பட்டுள்ளது அதேபோல மேலும் பல கடைகள் இந்த அரசாங்கத்தின் அனுமதியோடு திறப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.

அதில் அழகு சாதன பொருட்கள் மற்றும் மேலும் பல பொருட்கள் அடங்கிய தீர்வையற்ற கடைகள் இங்கே திறக்கப்படவுள்ளன.பலாலி விமான நிலையத்தை மேலும் விஸ்தரித்து பயணிப்போர் மிகவும் வசதியாக பயணிப்பதற்கு முயற்சிக்கின்றோம்.

தீர்வையற்ற கடைகளுக்காக ஒரு தனியான கட்டட தொகுதியினை அமைக்கவுள்ளோம் அதேபோல் விமானத்திற்குள் உள் நுழையும் வெளியேறும் பாதைகள் விஸ்தரிக்கப்பட்டு பயணிகள் சௌகரியமாக பயணிக்கக் கூடியவராக ஏற்பாடுகள் மேற்கொள்ள உள்ளோம்.

அத்தோடு இன்று முதலாவது தீர்வையற்ற கடை திறக்கப்பட்டுள்ளது அதேபோல மேலும் பல தீர்வை யற்ற கடைகளை திறப்பதற்கு யோசித்திருக்கின்றோம் அதற்கு ஒரு நடைமுறை உள்ளது குறிப்பாக சுங்கம் மற்றும் அரசாங்கத்தின் கேள்விகோரல் முறையின்படி உரியபடி விண்ணப்பித்து தீர்வையற்ற கடைகளுக்குரிய அனுமதியினை பெற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களும் இந்த நடைமுறைகளை பின்பற்றி தீர்வையற்ற கடைகளுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்-சென்னை நேரடி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகியது. இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது.
வாரமொன்றுக்கு இந்த விமான சேவை நிறுவனத்தினால் நான்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகியது.

பலாலி- சென்னை விமானசேவை 12 ஆம் திகதி முதல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

வாரத்திற்கு 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து புறப்படும் விமானம் காலை 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைவதற்கும் பலாலி விமான நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிய விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

வட மாகாணத்தை இலக்காக கொண்டு சுற்றுலாத்துறையை, கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் – ஹரின்

கொழும்பில் இருந்து யாழ். பலாலி விமான நிலையத்துக்கான ‘லயன் எயார்’ விமான சேவை இம்மாதம் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

வடக்கு மாகாணத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (டிச. 2) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை, சுற்றாடல் துறை மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளலாம்; ஆலோசனைகளை முன்வைக்கலாம்.

யாழ்.பலாலி விமான நிலையத்துக்கான ‘லயன் எயார்’ விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்துவது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்பாட்டுக்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்றார்.