உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பிரச்சார பணிகள் நடந்து வந்தன. இது இலங்கையிலுள்ள அனைவரும் தெரிந்த விடயம். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மட்டும் தெரியவில்லை. அவர் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரல்ல. அப்படியிருந்தும், அதில் தலையிட்டு, சர்வாதிகாரமாக தேர்தலை தடுக்கிறார். அரசியலமைப்பை மீறி தேர்தலை தடுக்கும் யாரும் எதிர்காலத்தில் தண்டனை அனுபவிப்பார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று (23) யாழ்ப்பாணம் ரக்கா வீதியில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழு தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பிரச்சார பணிகள் நடந்தது நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களிற்கும் தெரியும். ஒருவருக்கு மட்டும் தெரியாது. அவர் ஜனாதிபதி. அவருக்கு தேர்தலை பற்றி எதுவுமே தெரியாது.
அவர் மாத்திரமே தேர்தல் இல்லை, தேர்தலுக்கு நிதி வழங்கும் அதிகாரம் என்னிடமில்லை., அப்படி நிதி வழங்குவதாயினும் இப்போது நாட்டில் தேர்தலுக்கு அவசியமில்லையென்கிறார்.
இது சர்வாதிகாரமான ஆட்சி முறை.ஜனாதிபதி தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரல்ல. தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும். தேர்தலை பிற்போடுவதால் வாக்களிக்கும் உரிமை தடுக்கப்படுகிறது. இது அரசியலமைப்பை மீறும் செயல்.
அரசியலமைப்பை மீறும் யாரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறேன்.
தேர்தல் தொடர்பில் தவறான தீர்மானம் எடுப்பவர்கள், அதற்கு பொறுப்புக்கூற வேண்டி வரும் என்றார்.
ரணிலுக்கு பைத்தியம்
யாழ்ப்பாணம், மானிப்பாயில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா-
ஜனாதிபதி நினைக்கிறார் தான் விரும்பிய நேரத்தில் தேர்தலை நடத்தலாம், வேட்புமனுக்களை கொடுக்கலாம். ஆணைக்குழு உறுப்பினர்களை சந்திக்கலாம் என.
இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசி, தேர்தல் செல்லுபடியற்றது என குறிப்பிட்டுள்ளார்.
அவரிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். அப்படி செல்லுபடியற்ற ஒரு தேர்தலுக்கு உங்கள் கட்சி ஏன் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேர்தல் இல்லையென தெரியாதா.
இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி முட்டாள்தனமான, பைத்தியக்காரத்தனமான கருத்தை முன்வைத்துள்ளார். மக்களின் வாக்குரிமையுடன் விளையாட வேண்டாம். வாக்குரிமை என்பது ஜனாதிபதியினதோ, எதிர்க்கட்சி தலைவரினதோ விருப்பமல்ல. அது மக்களின் அடிப்படை உரிமை.
இன்று பாராளுமன்றத்தில் நடந்த பைத்தியக்காரத்தின் மூலம், தேர்தலை பிற்போடுவதன் பின்னணியில் இருந்தது யார் என்பது தெரிய வந்துள்ளது. ஐ.தே.க, பெரமுனவின் ஜனாதிபதி ரணிலே அவர்.
தேர்தலை பிற்போடுவதை நாம் ஏற்கோம். மக்களின் வாக்களிக்கும் உரிமையுடன் விளையாட வேண்டாம்.
நாட்டில் 220 இலட்சம் மக்கள் உள்ளனர். ஆனால் மக்கள் அங்கீகாரமில்லாத ஜனாதிபதியை பொதுஜன பெரமுன தெரிவு செய்துள்ளது. அவர் மக்களின் உரிமைகளுடன் விளையாடுகிறார். அனைத்து மக்களும் இணைந்து ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்.