ராஜபக்சக்களை இந்நாட்டு மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் – எரான் விக்ரமரட்ண

இந்நாட்டு மக்கள் ஒருபோதும் ராஜபக்சக்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மறந்து விடமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ண குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று மொட்டுக் கட்சியின் சிலர் கூறுகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்குள் தாங்கள் செய்த அநியாயங்களை மக்களிடமிருந்து மறக்கடித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்நாட்டு மக்கள் ஒருபோதும் அவர்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மறந்து விடமாட்டார்கள். ராஜபக்சக்கள் கொள்ளையடித்ததை நிரூபித்துக் காட்டுமாறு ஒரு அமைச்சர் கூறுகிறார்.

திருடியது ஒரு பக்கம் இருக்கட்டும். பிழையான தீர்மானங்களை எடுத்து நாட்டு மக்களை இந்த நிலைமைக்குள் தள்ளியது யார் என்று கேட்க விரும்புகிறேன்.

இன்று 27 வீதமான பெற்றோர் தங்களின் உணவுத் தேவையை குறைத்து, தங்களின் பிள்ளைகளுக்கு உணவு வழங்கி வருவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இதற்கெல்லாம் யார் காரணம்? இப்படியான நபர்களுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.