லசந்த கொல்லப்பட்டு 14 வருடங்களாக கைது செய்யப்படாத குற்றவாளிகள்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு  ஜனவரி 8 ஆம் திகதியுடன் 14 வருடங்கள் நிறைவடையும் நிலையில், பொரளை கனத்தையில் அவரை நினைவு கூரும் விஷேட அஞ்சலி வைபவம் இடம்பெற்றது.

லசந்தவின் கல்லறைக்கு அருகே இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வானது லசந்த குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சட்டத்தரணிகள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (08)காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த அஞ்சலி  நிகழ்வில், லசந்தவின் சகோதரரான லால் விக்ரமதுங்க, அவரது மகள் ரைஸா உள்ளிட்டோரும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க  உட்பட பல உள் நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் சட்டத்தரணிகள் பங்கேறிருந்தனர்.

இதன்போது முதலில் லசந்த விக்ரமதுங்கவின் கல்லறைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு லசந்தவின் சகோதரரான லால் விக்ரமதுங்க கருத்து வெளியிட்டார்.

லால் விக்ரமதுங்க கருத்து தெரிவிக்கையில்,

அத்துடன் லசந்தவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க தனது ட்விட்டரில் தந்தையின் நினைவு நாள் குறித்து கருத்து பதிவு செய்துள்ளார். அதில்,

14 வருடங்களாக நியாயம் கிடைக்காவிட்டாலும், லசந்தவின் கொலைக்கு எதிராக நீதி கிடைக்கும் வரை போராடப் போவதாக அதில் அஹிம்சா விக்ரமதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  ‘ கடந்த மக்கள் போராட்டத்தின் போது உங்கள் ஆத்மாவினை உணர்ந்தேன். அவை அனைத்தையும் காண நீங்கள் உயிருடன் இருந்திருக்க வேண்டும்.’ என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கி செல்லும் போது அடையாளம் தெரியாதோரால் கொல்லப்பட்டார்.

முதலில் அவர் சுட்டுக்கொல்லப்ப்ட்டதாகவே பிரேத பரிசோதனை அறிக்கையும் வழங்கப்பட்டிருந்த நிலையில்,  2015 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற சி.ஐ.டி. விசாரணைகளை அடுத்து 2016 இல் அவரது சடலம் மீள தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது  லசந்த  கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்தி கொல்லப்பட்டதாக வெளிப்படுத்தப்பட்டது.  மிருக வேட்டைக்கு பயன்படுத்தும் ஒருவகை ஆயுதத்தால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக  சி.ஐ.டி.யினர் சந்தேகிக்கின்றனர்.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலையாளைகளை தப்பிக்க வைக்க அவர் கொலை செய்யப்பட்டது முதல் கடந்த 2015 வரை கல்கிசை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிசாரால்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை  சி.ஐ.டி.யினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி  லசந்த விவகாரத்தில் சாட்சியாளரான  லசந்தவின் சாரதியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சார்ஜன்ட் மேஜர் உதலாகம என்பவரும், லசந்தவின் குறிப்புப் புத்தகம் உள்ளிட்ட சாட்சிகளை அழித்து  புதிய சாட்சிகளை நிர்மாணித்தமை தொடர்பில் அப்போது கல்கிசை பொலிஸ்  குற்றவியல் பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகந்தபால,  மேல் மாகாணத்தின் தெற்கு முன்னாள் பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் தற்போது பிணையில் உள்ளனர்.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படு கொலை செய்யப்பட்டு  14 வருடங்கள் நிறைவடையும் நிலையில், அவரை கொலை செய்தது அப்போது மருதானையில் இயங்கிய திரிப்போலி இராணுவ புலனாய்வு முகாம் புலனாய்வாளர்கள் என்பதற்கான சாட்சிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 2015 முதல் சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பீ.எஸ். திசேராவின் கீழ் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான சிறப்புக் குழு முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரையிலான விசாரணைகளின் படியும், லசந்தவின் சகோதரர், மனைவி மற்றும் மகளின் வாக்கு மூலங்களின் பிரகாரமும் குறித்த படுகொலைக்கு மிக் விமான கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க அம்பலப்படுத்தியமையே காரணம் என தெரியவந்துள்ளது.

அதன்படி, கொலை இடம்பெற்றுள்ள விதம் அதன் பின்னர் விசாரணை என்ற பெயரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் சான்றுகளை அழித்திருக்கும் விதமும், அனுராதபுரம் அதி விஷேட பாதுகாப்பு வலயத்தில் இரு தமிழ் இளைஞர்களை கொலை செய்துவிட்டு அவர்களது மோட்டார் சைக்கிளை கொழும்புக்கு கடத்தி வந்து லசந்தவின் கொலையை புலிகளுடன் தொடர்படுத்த எடுத்துள்ள முயற்சியும் இக்கொலையின் பின்னணியில் மிகப் பெரும் சக்தி ஒன்று இருந்துள்ளமை புலப்படுத்துவதாக சி.ஐ.டி. தெரிவிக்கின்றது.

லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரத்தில்  சாட்சியாளர் ஒருவரை  கடத்தியமை, அச்சுறுத்தியமை மற்றும் கொலை குறித்த சான்றுகளை அழித்தமை உள்ளிட்ட விடயங்கள் குறித்த  விசாரணைகளை சி.ஐ.டி. நிறைவு செய்துள்ளது.

எனினும் பிரதான சம்பவமான, சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை குறித்த குற்றவாளிகளைக் கண்டறியும் விசாரணைகள் தொடர்கின்றன.

இது தொடர்பில் சி.ஐ.டி.யின் விசாரணையாளர்கள், கல்கிசை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ள நிலையில்,  நிறைவு செய்யப்பட்டுள்ள லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சியாளர் ஒருவரை  கடத்தியமை, அச்சுறுத்தியமை மற்றும் கொலை குறித்த சான்றுகளை அழித்தமை உள்ளிட்ட விடயங்கள் குறித்த  விசாரணைகளின் கோவைகள் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனினும் எவருக்கு எதிராகவும் இதுவரை குற்றப்பத்திரிகை முன் வைக்கப்படவில்லை.

இந்த கொலை குறித்து விசாரணை செய்த, பிரதான விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா, அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில்,  விசாரணைகளை நெறிப்படுத்திய, விசாரணையுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.