வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் காணப்படும் மக்கள் காணிகளை விடுவிப்பதற்காக விசேட அலுவலகமொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை துரிதமாக முன்னெடுக்குமாறு பாதுபாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் ஆலோசனைக்கமைய இந்த அலுவலகம் ஸ்தாபிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தில் பிரிபேடியர் நிலை அதிகாரி தலைமையில் ஸ்தாபிக்கப்படவுள்ள இந்த காணி விடுவிப்பு அலுவலகமானது 6 மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் காணி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலும், பாரம்பரியமான நில உரிமையை கொண்டுள்ள மக்களுக்கு அநீதிகள் ஏற்படாத வகையிலும் காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் குறித்த அலுவலகத்தை ஸ்தாபிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டில் 23,850.72 ஏக்கர் மக்களின் காணிகள் பாதுகாப்புப் படைகள் வசம் காணப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டு ஆகுகையில் இந்த எண்ணிக்கையில் 20,755.52 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், 106 ஏக்கர் மக்கள் காணி கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டது. அத்துடன், 2989.80 ஏக்கர் மக்கள் காணி விடுவிப்பதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து அவதானத்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.