வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 278 ஏக்கர் காணி விடுவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (22) யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 278 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது.

ஜே- 244 வயாவிளான் கிழக்கு , ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு , ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது

அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இராணுவம் வசமிருந்த 109 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் ஒரு தொகுதி காணிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட பதில் அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அலுலகத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானியும் ஆகிய சாகல ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு காணி உரியவர்களுக்கான காணிப் பத்திரங்களை வழங்கிவைத்தார்.

இதில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரம ரட்ன, ஜனாதிபதி செயலக வடமாகாண இணைப்பாளர் எல் இளங்கோவன், முன்னாள் அரசாங்க அதிபர்கள் பாதுகாப்பு படையினர்கள், கடற்படையினர், பிரதேச செயலாளர்கள், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள், பலரும் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் மாவட்ட கட்டளை தளபதியுடன் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதியுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

பலாலி இராணுவ தலைமையலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி எம்சிபி விக்ரமசிங்கவை யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து பேசினர்.

குறித்த சந்திப்பில் ஜனாதிபதியின் வடமாகாண மேலதிக செயலாளர் இளங்கோவன் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) கே.ஸ்ரீமோகனன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகங்கா சுதீஸ்னர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள 300 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணக்கம்

யாழில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 300 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்த நிலையிலேயே, 300 ஏக்கர் விவசாய நிலத்தினை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் வறுத்தலைவிளான், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வீதி இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதோடு,

பலாலி கிழக்கு பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் மீள்குடியேறியோரின் காணிப்பிரச்சினைகளுக்கு 2 மாதங்களுக்குள் தீர்வு – பிரதமர் தினேஷ்

வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்து மீள் குடியேறியுள்ள மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படும். அது தொடர்பில் ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போதும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் மக்களின் காணி விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சில கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பல வருடங்கள் எடுத்தன. அதனால் சில பிரதேசங்களில் தற்காலிகமாக குடியேறியவர்களை நிரந்தர குடியேற்றவாசிகளாக்குவதற்கு தேவையான பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதிலும் ஏனைய நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் செய்த ஒவ்வொரு தடவையும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டன. அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

1600 குடும்பங்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லாமலிருந்தன.அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளின் காணிகள் தொடர்பான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகள் அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கு கட்டம் கட்டமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்ட பூர்வமற்ற ரீதியில் குடியிருப்போரை அங்கு நிரந்தர குடியிருப்பாளர்களாக்குவதற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதால் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக அதன் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு நடுத்தர மக்களின் காணிகளை மீளப் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அதன் முதல் உரிமையாளர்கள் உரிமை கோரி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்கள். எவ்வாறாயினும் இரு தரப்புக்குமிடையில் இணக்கப்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் சில காணிகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தாமதமாகி யுள்ளன.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் தற்போது வசிக்கும் காணிகளுக்கு சட்டபூர்வமான பதிவுகள் இல்லாத காரணத்தால் அந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்த வகையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

அவ்வாறான குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் காணி உரிமைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கம் கொள்கை ரீதியாக அதனை மேற்கொள்ளவுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டும் அபிவிருத்தி கூட்டங்களில் இதன் குறைபாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அவ்வாறான மக்கள் தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அனைவருக்கும் நலன்புரி மற்றும் நிவாரணங்கள் வழங்குவதில் கவனம் செலுத்தப்படும். விவசாயம், மீன் பிடி அல்லது வேறு தொழில்களில் ஈடுபடுவோர் அனைவருக்கும் அதனை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அத்துடன் எந்த விவசாயக் காணிகளிலும் சட்டபூர்வமானாலும் சரி சட்டபூர்வமற்ற விதத்திலும் சரி குடியிருப்போரை துரத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என்றார்.

வடக்கு, கிழக்கில் 1985 முன்னர் மக்கள் வாழ்ந்த காணிகளை மீள வழங்க நடவடிக்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய வரைபடத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த காணிகள் இருந்தால் அதனை அடையாளப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் படி நான் சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய அந்த படங்களை மக்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கமைய, எனது அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவசாரிகள் திணைக்களத்தின் செயலாளர் நாயகம் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.

மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ள இவர்கள் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த இடங்கள் எவை என்பது குறித்து முழுமையான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த தகவல்களுக்கு அமைய இறுதி அறிக்கையும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஜனாதிபதி செயலாளரின் தலையிலான குழுவிடம் சமர்ப்பித்து, அதனூடாக காணி ஆணையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பின்னர் அந்த காணிகளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இதனைத் தொடர்ந்து உரிய காணியை, காணி உறுதி பத்திரத்துடன் மக்களிடம் வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வட,கிழக்கு மக்களின் காணிகளை விடுவிக்க இராணுவ அதிகாரி தலைமையில் விசேட அலுவலகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் காணப்படும் மக்கள் காணிகளை விடுவிப்பதற்காக விசேட அலுவலகமொன்றை  ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான  பணிகளை துரிதமாக முன்னெடுக்குமாறு பாதுபாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் ஆலோசனைக்கமைய இந்த அலுவலகம் ஸ்தாபிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தில் பிரிபேடியர் நிலை அதிகாரி தலைமையில் ஸ்தாபிக்கப்படவுள்ள இந்த காணி விடுவிப்பு அலுவலகமானது 6 மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் காணி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலும், பாரம்பரியமான நில உரிமையை கொண்டுள்ள மக்களுக்கு அநீதிகள் ஏற்படாத வகையிலும் காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் குறித்த அலுவலகத்தை ஸ்தாபிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டில் 23,850.72 ஏக்கர் மக்களின் காணிகள் பாதுகாப்புப் படைகள் வசம் காணப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டு ஆகுகையில் இந்த எண்ணிக்கையில் 20,755.52 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், 106 ஏக்கர் மக்கள் காணி கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டது. அத்துடன், 2989.80 ஏக்கர் மக்கள் காணி விடுவிப்பதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து அவதானத்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.

33 வருடங்களாக இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

தல்செவன விடுதி அமைந்துள்ள திருகோண சத்திர காணியை மீட்டுத் தர சஜித்திடம் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் “தல்செவன” விடுதி அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த “திருகோண சத்திரம்” எனும் சிவபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான காணியினை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரிடம் அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவரும் , சிவபூமி அறக்கட்டளை தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தான் எதிர்க்கட்சி தலைவரிடம் அவ்வாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சந்திப்பின் போது , எதிர்க்கட்சி தலைவரிடம் கீரிமலை காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இருக்கின்ற கோயில்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதை விடுவிக்கின்ற முயற்சியினை முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல் தல்செவன விடுதிக்கென பயன்படுத்தப்படுகின்ற 200 வருடம் பழமை வாய்ந்த திருகோணசத்திரம் என்கின்ற சிவ பூமி அறக்கட்டளைக்குரிய அந்த நிலத்தினை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அத்துடன் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, மற்றும் இராமநாதன் இந்து கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளும் பேருந்து இல்லாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு பேருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அதற்கு பேருந்தை வழங்க முடியும். அதனை பரிசீலித்து விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

மேலும் வீட்டுத்திட்டத்தை உங்களுடைய தந்தையார் பிரேமதாசா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அது ஒரு நல்ல பணி இருநூறு வருடமாக மலையகத் தமிழர்கள் இன்னும் அடிமையாக வீடு வாசல் இல்லாது இருக்கின்றார்கள் அவர்களுக்கும் நன்றியோடு வீட்டு திட்டம் வழங்குகின்ற முயற்சியில் தாங்கள் ஈடுபட வேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம்” என தெரிவித்தார்.

வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம், உதவிக் கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்ற கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன.

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (11) முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை அதன் உரிமையாளர்களான பொது மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் காசோலைகளை கையளிக்கும் அடையாள நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

கடந்த 33 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் தமது காணிகள் மீளக் கிடைத்ததையிட்டு ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வட மாகாணத்துக்கான ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எம்.இளங்கோவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.