இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவினர் இன்று முதல் வடக்கிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.
இன்றையதினம், காலை பத்துமணியளவில் வவுனியாவை வந்தடையவுள்ள அக்குழுவினர் வவுனியா மாவட்டத்தில் 500 பேருக்கான வாழ்வாதார பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவள்ளனர்.
அதன்பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணிக்கும் அக்குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவிற்கான 500 பொதிகளை மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரனிடத்தில் கையளிப்பதோடு வெலிஓயா பிரதேச செயலகத்திற்கான 250 வாழ்வாதாரப் பொதிகளை அக்குழுவினரே நேரடியான விஜயமொன்றை மேற்கொண்டு வழங்கவுள்ளனர்.
அதனையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் அக்கழுவினர் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடத்தில் வாழ்வாதார பொதிகளை கையளித்த பின்பு யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கவுள்ளனர்.
யாழில் தங்கியிருக்கும் குறித்த குழுவினருடன் சீன பௌத்த அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து நாளை 6ஆம் காலை 9 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு, 10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரனைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு நெடுந்தீவு மக்களின் வாழ்வாதார உதவியாக 500 வாழ்வாதரப் பொதிகள் கையளிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து மாலை 2 மணிக்கு நாவற்குழி விகாரைக்குப் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதோடு, குறித்த தினம் முன்னிரவில் சிவில் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தத்துறை சார்ந்தவர்கள் சிலரைச் சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை மறுதினம் 7ஆம் திகதி காலை நயினாதீவு பயணிக்கும் குறித்த குழுவினா நாகவிகாரையில் வழிபாடுகளைச் செய்யவுள்ளதோடு அங்குள்ள பொது மக்களுக்காக 250 வாழ்வாதார பொதிகளை கையளிக்கவுள்ளனர்
பின்னர் அங்கிருந்து யாழ்.திரும்பும் அவர்கள் சிறிது நேரத்தில் மன்னாரிக்குப் பயணித்து 8ஆம் திகதி மன்னார் மாவட்டச்செயலாளர் அ.ஸ்ரான்லி டிமலைச் சந்திக்கவுள்ளதோடு அங்கும் பொதுமக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளதோடு அன்றையதினம் மாலையில் வடக்கிற்கான விஜயத்தினை நிறைவு செய்துகொண்டு கொழும்பு நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.