விசேட அனுமதியின் கீழ் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை சபை நிதியில் கொள்வனவு செய்யப்படவுள்ள நான்கு உழவு இயங்திரங்களும் பெட்டிகளும் விரைவில் மக்களுக்கான சேவைகளை வழங்கவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துரைத்த அவர், எமது சபை தொடர்ச்சியாக கழிவு அற்றுதல் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற செயற்பாடுகளுக்கு வாகனப் பற்றாக்குறையினை எதிர்கொண்டு வந்தது. யாழ். மாவட்டத்தில் 74 ஆயிரம் மக்களையும் 104 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவினையும் உடைய மிகப்பெரிய சபையில் ஒப்பீட்டளவில் வாகனப்பற்றாக்குறை கருமங்களை மேற்கொள்வதில் கடும் சவாலாகக் காணப்பட்டது. ஏனைய பிரதேச சபைகளில் இருந்து இரவல் பெற்றும் வாடகைக்கு அமர்த்தியுமே வாகன பற்றாக்குறையினை சபை இதுவரை நிவர்த்தித்து வந்திருக்கின்றது. இந் நிலையில் புதிய உழவு இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு அவைத்தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தபோதும் சூழ்நிலை காரணமாக உடனடியாக கொள்வனவு செய்ய முடியவில்லை.
ஆரச கொள்கையில் வாகன கொள்வனவு நிறுத்தப்பட்டுள்ள போதும் திறைசேரியின் அனுமதி உழவு இயந்திரக் கொள்வனவுக்கான அனுமதி தற்போது பெறப்பட்டுள்ளது. பிரதேச சபை கேள்விக்கோரலையும் மேற்கொண்டு அக் கேள்விக்கோரலில் பெறுகைச்சட்ட நடைமுறையின் பிரகாரம் உழவு இயந்திரங்களை சபைக்கு விற்பனை செய்வதற்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களின் விண்ணப்பங்கள் தற்போது தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ளன.